×

பளுகல் அருகே வாலிபரின் மிரட்டலால்தற்கொலை செய்த மாணவியின் லேப்டாப், செல்போன் ஆய்வு- முக்கிய படங்கள், வீடியோக்கள் சிக்கியதாக தகவல்

நாகர்கோவில் :  பளுகல் அருகே வாலிபரின் மிரட்டலால் தற்கொலை செய்த மாணவியின் செல்போன், லேப் டாப்பில் முக்கிய ஆதாரங்கள் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
குமரி மாவட்டம் பளுகல் அருகே உள்ள கருமானூர் மருதன்விளை பகுதியை சேர்ந்தவர் பீனா. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் ஆதிரா (19). உறவினர் வீட்டில் தங்கி இருந்து பி.காம். இரண்டாமாண்டு படித்து வந்த ஆதிரா, கடந்த 22ம்தேதி தூக்கு போட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து பளுகல் போலீசார் விசாரணை நடத்தி ஆதிரா உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தடயவியல் சோதனை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்ததால், மாணவி உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர் நேற்று முன் தினம் மதியம் மாணவி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது தாயாரிடம் தான் ஆதிரா உடலை ஒப்படைக்க வேண்டும் என்பதால், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிணவறையில் ஆதிரா உடல் உள்ளது. ஆதிராவின் தற்கொலை குறித்து பளுகல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கி உள்ளனர்.

கடந்த மாதம் 15ம்தேதி, ஆதிரா தரப்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டு இருந்தது. அந்த புகார் மனுவில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர், வாட்ஸ் அப் குரூப் மூலம் தனக்கு அறிமுகமாகி, ஆசை வார்த்தைகள் கூறி தன்னுடன் பழகி, தற்போது தனது புகைப்படங்களை மார்பிங் செய்து, சமூக வலை தளத்தில் வெளியிட்டு தனது தாயாரிடம் ரூ.10 லட்சம் வரை கேட்டு மிரட்டுவதாக கூறி இருந்தார். இந்த புகாரை சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்க எஸ்.பி. உத்தர விட்டார். ஆனால் சைபர் க்ரைம் போலீசார் இதில் முறையாக விசாரிக்க வில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி, சம்பந்தப்பட்ட நபர் தொடர்ந்து மிரட்டியதாக கூறப்படுகிறது. போட்டோக்கள், வீடியோக்களை மார்பிங் செய்து மாணவியின் தாயாருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தான் மனம் உடைந்து மாணவி தற்கொலை செய்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.  மாணவியின் தற்கொலைக்கு பின்னால் இரு வாலிபர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது மாணவி புகாரில் தெரிவித்திருந்த வாலிபர் மற்றும் அவரது குடும்பத்தினரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  மேலும் மாணவியின் செல்போன், லேப் டாப்பை ஆய்வு செய்தனர். இதில் மாணவியை மிரட்டியதற்கான பல்வேறு புகைப்பட ஆதாரங்கள், வீடியோக்கள் தொடர்பான தகவல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபருடன் மாணவி நடத்திய உரையாடல் பதிவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடக்கிறது. தற்கொலைக்கு காரணமான வாலிபரை கைது செய்ய வேண்டும் என ஆதிராவின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவரது தாயார் வந்ததும் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர், எஸ்.பி.யை சந்தித்து மனு அளிப்பதுடன், போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே வழக்கை திசை திருப்பாமல் உரிய முறையில் விசாரணை நடத்த எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவிட வேண்டும். அப்போது தான் சமூக வலைதளங்களை காட்டி இளம்பெண்களை மிரட்டி, தற்கொலை வரை கொண்டு செல்லும் சம்பவங்கள் குறையும் என சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

Tags : Palugal , Nagercoil: Student commits suicide by threatening teenager near Palugal
× RELATED பளுகல் அருகே வாலிபரின்...