மஞ்சூர் சாலையில் உலா வரும் காட்டு மாடு-மக்கள் அலறியடித்து ஓட்டம்

மஞ்சூர் : சாலையில் கம்பீர நடைபோட்ட காட்டுமாடை கண்டு பொதுமக்கள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தை, கரடி, காட்டு  மாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகள்  அதிகளவில் நடமாடி வருகிறது. 10, 20 என கூட்டமாக காணப்படும் காட்டுமாடுகள்  பெரும்பாலும் சுற்றுபுற பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு  மேய்ச்சலில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் தேயிலை தோட்டப்பணிகளுக்கு செல்லும்  தொழிலாளர்கள் மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். அவ்வப்போது  குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையும் காட்டுமாடுகள் வீட்டு தோட்டங்களில்  பயிரிடப் பட்டுள்ள காய்கறி செடிகளை தின்று தோட்டங்களையும் நாசமாக்குகிறது.  

இந்நிலையில் நேற்று காலை மஞ்சூர் கரியமலை பிரிவில் ஐயப்பன் கோயில் அருகே  குழந்தைகள், பெண்கள் உள்பட பொதுமக்கள் பலர் அரசு பஸ்களுக்காக  காத்திருந்தனர். அப்போது ராட்சத காட்டுமாடு ஒன்று நடு ரோட்டில் கம்பீரமாக  நடந்து வந்தது. சாலையோரத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருநததால்  ஓரமாக நின்றிருந்த மக்களுக்கு காட்டுமாடு வருவது முதலில் தெரியவில்லை.  அருகில் வந்ததும் அதை கண்ட பொதுமக்கள் பீதி அடைந்து அலறி அடித்து கொண்டு  ஓடினார்கள்.

மேலும் அவ்வழியாக சென்ற வாகனங்களும் எதிரே ராட்சத காட்டுமாடு  வருவதை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. இதை எதையும் பொருட்படுத்தமால்  சாவகாசமாக நடந்து சென்ற காட்டுமாடு சாலையோரத்தில் இருந்த வேலியை உடைத்து  தேயிலை தோட்டத்திற்குள் சென்றது. பொதுமக்கள் நடாட்டம், வாகனப் போக்குவரத்து  மிகுதியான நேரத்தில் ராட்சத காட்டுமாடு நடுரோட்டில் நடந்து சென்றது  பரபரப்ைப ஏற்படுத்தியது.

Related Stories:

More
>