வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மழைநீர் தேங்குவதால் நோயாளிகள், ஊழியர்கள் அவதி-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வாணியம்பாடி :  வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீரால் நோயாளிகள், ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் புற நோயாளிகள் என நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகள் அரசு மருத்துவமனையை நாடி வருகின்றனர்.

இந்நிலையில் வாணியம்பாடியில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அரசு மருத்துவமனை உள்ளதால் வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்களில் சிக்குபவர்கள் இங்கு சிகிச்சைக்கு சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர்.இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிரை காப்பதற்காக முதலுதவி அளிக்க வாணியம்பாடி அரசு மருத்துவமனையை தேடி வருகின்றனர். இந்நிலையில் நியூடவுனில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்பட்டு விடுவதால் அவ்வழியாக வரக்கூடியவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்லமுடியாமல் ஆம்புலன்சிலேயே உயிரிழக்கும் அவலம் உள்ளது.

இந்நிலையில் ரயில்வே கேட்டை கடந்து வரக்கூடிய நபர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவ்வாறு சிகிச்சை பெறுவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பது அதிகரித்து வருகின்றது. அவ்வாறு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உயிர் இழக்கக் கூடிய நபர்களை மருத்துவமனையிலிருந்து பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லக்கூடிய வழிப்பாதையில் தற்போது பருவமழை பெய்து வருவதால் வாணியம்பாடி அரசு மருத்துவமனை முழுவதும்  மழைநீரால்  சூழ்ந்துள்ளது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதனால் மருத்துவமனையிலிருந்து எடுத்துச் சென்று இறந்தவர் உடல்களை சவக்கிடங்கில் வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே  இதுகுறித்து தொடர்ந்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகி வருகின்றது.

இருந்தபோதிலும் மாவட்ட நிர்வாகம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இனிவரும் நாட்களில் அரசு மருத்துவமனை மீது கவனம் செலுத்த வேண்டுமென வாணியம்பாடி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், தற்போது பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் அரசு மருத்துவமனை மீது கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து நகர்புற மக்கள் மற்றும் கிராமப்புற மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

More
>