செய்யாறு அருகே தனியார் நிலத்தில் வேரோடு பிடுங்கப்பட்ட பனை மரங்கள் மீண்டும் நடப்பட்டது-ஆர்டிஓ அதிரடி நடவடிக்கை

செய்யாறு : செய்யாறு அருகே தனியார் நிலத்தில் வேரோடு பிடுங்கப்பட்ட பனை மரங்கள் ஆர்டிஓவின் அதிரடி நடவடிக்கையால் மீண்டும் நடப்பட்டுள்ளது.

பனைமரம் தமிழகத்தின் மாநில மரமாக அங்கீகரிக்கப்பட்டு போற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பனை மரங்கள் வளரும் பரப்பளவு குறைந்து வருகிறது. அதனால் பனைமரங்களை வெட்டக்கூடாது. பனையைக் காக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், பனை மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி பெறவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சுமங்கலி சாலையில் நெடும்பிறை கிராமம் அருகே தனியாருக்கு சொந்தமான  இடத்தில் கருங்கல் ஜல்லி உடைக்கும் ஆலை அமைய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த  இடத்தை சுத்தம் செய்து வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் நிலத்தில் சாலையோரம் இருந்த 10க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கப்பட்டுள்ளது.

இதைக்கண்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பனைமரங்கள் பிடுங்கி எறியப்பட்டுள்ள படங்களை, செய்யாறு ஆர்டிஓ விஜயராஜிக்கு அனுப்பி வைத்தனர்.இதையடுத்து, வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பனை மரங்களை அதே இடத்தில் நட ஆர்டிஓ உத்தரவிட்டார். இதையடுத்து பிடுங்கி எறியப்பட்ட பனைமரங்களில் சுமார் 20 அடி உயரமுள்ள நான்கு மரங்கள் நேற்று முன்தினம் அதே பகுதியில் மீண்டும் நடப்பட்டது. மற்ற மரங்கள் வேர்கள் பாதிக்கப்பட்டதோடு, பட்டுப்போனதால் நடப்படவில்லை.

Related Stories:

More