கோமுகி அணையில் 1500கனஅடி நீர் வெளியேற்றம்-கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சின்னசேலம் : கல்வராயன்மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோமுகி அணை நிரம்பியதால் அணையில் இருந்து வினாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் 46 அடி வரை நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டது. இருப்பினும் அணை கரைகளின் பாதுகாப்பு கருதி கடந்த சில வருடங்களாக 44 அடி நீரை மட்டுமே சேமித்து வருகின்றனர்.

இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகிறது. கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன் மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர். கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சம்பா பருவ சாகுபடிக்கு அக்டோபர் முதல் வாரத்தில் கோமுகி அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கல்வராயன்மலையில் கடந்த 2 மாதங்களாக மழை இல்லாததால் அணை நிரம்பாததால் அக்டோபர் முதல் வாரத்தில் திறக்க முடியவில்லை.  

இந்நிலையில் கல்வராயன்மலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கோமுகி அணையின் நீர்மட்டம் 43.6 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் கல்வராயன்மலையில் பெய்த மழையின் காரணமாக நேற்று இரவு அணைக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர்வரத்து இருந்தது. இதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சங்கு ஊதி அணையில் இருந்து 1,500 கனஅடி நீரை வெளியேற்றினர். பின்னர் நேற்று காலை முதல் அணையில் இருந்து 800கனஅடி நீரை வெளியேற்றி வருகின்றனர். தற்போது அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

அணை நிரம்பிய நிலையில் கல்வராயன்மலையில் மழை பெய்யும் போது காட்டாற்று நீர் அணைக்கு வரும். இதனால் நீர்வரத்து இருக்கும் போதெல்லாம் ஆற்றில் நீர் திறந்து விடப்படும். ஆகையால் வடக்கநந்தல், அக்கராயபாளையம், வெங்கட்டாம்பேட்டை, ஏர்வாய்பட்டிணம் உள்ளிட்ட கோமுகி ஆற்றங்

கரையோரம் வசிக்கும் மக்கள் கால்நடைகளுடன், பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என அணை நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More
>