×

சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணைக்கு ஆஜரானார் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!: அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்ப லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம்..!!

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்காக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகி உள்ளார். கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் பணம், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு தொடர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி செப்டம்பர் 30ம் தேதி முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

அச்சமயம் உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, தான் விசாரணைக்கு ஆஜராக கால அவகாசம் வேண்டும் என கேட்டிருந்தார். அந்த அடிப்படையில் 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு, இன்று ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், சென்னை ஆலத்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜராகி உள்ளார். குறிப்பாக சொத்துக் குவிப்பு வழக்கானது அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிற்கு தேவையான பல முக்கிய ஆவணங்களை சோதனையின் போதே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

வருமானத்திற்கு அதிகமாக 55 சதவீதம் சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அடிப்படையாக வைத்து விஜயபாஸ்கரின் அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பி குறுக்கு விசாரணை செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை வரை விசாரணை நடைபெறும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Tags : Former Minister ,MR Vijayabaskar , Accumulation of assets, investigation, MR Vijayabaskar
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...