கரூரில் தேர்தல் அதிகாரியின் காரை மறித்து அத்துமீறிய விவகாரம்!: அதிமுக-வை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்பட 4 நிர்வாகிகள் கைது..!!

கரூர்: கரூரில் தேர்தல் அதிகாரியின் வாகனத்தை வழி மறித்து மிரட்டிய விவகாரத்தில் அதிமுக-வை சேர்ந்த ஒன்றிய செயலாளர் உள்பட 4 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரில் கடந்த 22ம் தேதி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவருக்கான மறைமுக தேர்தல் தொடங்கிய சில மணி நேரங்களில் அதனை ஒத்திவைப்பதாக தேர்தல் அதிகாரி மந்த்ராச்சலம் அறிவித்திருந்தார். இதனை கண்டித்து அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுக-வினர் தேர்தல் அதிகாரியின் காரை மறித்து அத்துமீறலில் ஈடுபட்டனர்.

அச்சமயம் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்த போலீசார், பின்னர் விடுவித்தனர். தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தான்தோன்றிமலை ஒன்றிய அதிமுக செயலாளர் சுந்தர், புஞ்சை புகழூர் பேரூராட்சி தலைவர் கமலக்கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் திருவிக, அவரது மகனான ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வன் ஆகிய 4 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

Related Stories:

More