×

தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை உள்நாட்டு பொருட்களை வாங்கி கொண்டாடுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளில் உள்நாட்டு தயாரிப்பு பொருட்களையே வாங்கி கொண்டாடுங்கள். இதன் மூலம், உள்ளூர் நெசவாளி, கைவினைக் கலைஞர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றலாம்,’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிறன்று அகில இந்திய வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார். நேற்றைய ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: பல்வேறு பண்டிகைகள் ஒன்றாய் சேர்ந்து வரும் போது, அதற்கான ஏற்பாடுகளை நாம் முன்கூட்டியே தொடங்கி விடுவோம். அந்த வகையில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்காக நீங்கள் அனைவரும் இப்போது புத்தாடை உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆரம்பித்திருப்பீர்கள்.

அப்படி நீங்கள் பொருட்களை வாங்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயம், உள்நாட்டு தயாரிப்பு பொருட்களை வாங்க வேண்டும் என்பதுதான். உள்நாட்டு பொருட்களை நீங்கள் வாங்கி பண்டிகையை கொண்டாடுவதன் மூலம், ஏழை சகோதர, சகோதரிகள், நெசவாளிகள், கைவினைக் கலைஞர்கள் வாழ்விலும் ஒளி ஏற்றுகிறீர்கள். எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த பண்டிகை காலத்தில் உள்நாட்டு உற்பத்தி பொருட்களையே வாங்கி பயன்படுத்துவோம். கடந்த ஜனவரி 16ம் தேதி கொரோன தடுப்பூசி செலுத்தத் தொடங்கி 9 மாதத்தில் 100 டோஸ் தடுப்பூசி இலக்கை நாம் எட்டி உள்ளோம். இதற்காக கோடான கோடி வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது லட்சக்கணக்கான சுகாதார பணியாளர்களின் கடின உழைப்பினால்தான் இந்தியா இந்த இலக்கை இன்று எட்டி உள்ளது.

அவர்களுக்கு ஒவ்வொரு இந்தியரின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் 31ம் தேதி, நாட்டின் முதல் துணை பிரதமரான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் விழா தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று, போலீசாரின் பைக் பேரணி, பல்வேறு மொழிகளில் தேச பக்தி பாடல்கள் பாடுதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

பெண் போலீசார் எண்ணிக்கை இரட்டிப்பு
மன் கி பாத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘ராணுவம், போலீஸ் போன்ற பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பணியில் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. போலீசில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 2014ல் 1.05 லட்சமாக இருந்தது. இது தற்போது 2.15 லட்சமாக இரட்டிப்பாகி உள்ளது. துணை ராணுவப் படைகளிலும் பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. வனப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் கோப்ரா கமாண்டர் போன்ற கடினமான பணியிலும் பெண்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். பாதுகாப்பு பணியில் பெண்களின் இருப்பு, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பெண் போலீசார் இந்த கால சிறுமிகளுக்கு ரோல் மாடல்களாவர். அவர்கள் பள்ளிகளுக்கு சென்று பள்ளிச் சிறுமிகளுடன் உரையாடி, புதிய தலைமுறைக்கு புதிய வழியை காட்ட வேண்டும்,’’ என்றார்.

Tags : Deepavali ,PM Modi , Deepavali, festival, domestic material, Prime Minister Modi
× RELATED ஸ்டார்ட்அப் தொடர்பான நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி..!!