புதுவையில் பட்டப்பகலில் பயங்கரம் ரவுடி, நண்பர் வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை: 5 பேர் கும்பலுக்கு வலை

புதுச்சேரி: புதுச்சேரி  வாணரப்பேட்டையில் பிரபல ரவுடி, நண்பர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால்  வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக 5 பேர் கும்பலை போலீசார்  தேடி வருகின்றனர். புதுச்சேரி வாணரப்பேட்டை தாவீதுபேட் பகுதியை  சேர்ந்தவர் ரவி என்ற பாம் ரவி (33). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை உள்ளிட்ட பல  வழக்குகள் உள்ளன. ரவி, தற்போது ஜாமீனில் வெளியே வந்திருந்தார். இந்த  நிலையில் நேற்று மதியம் 3  மணியளவில் ரவி, பைக்கில் வாணரப்பேட்டை முருகசாமி  நகரை சேர்ந்த தனது நண்பர் பரிடா அந்தோணி ஸ்டீபன் (28) என்பவருடன்  வாணரப்பேட்டை அலோசன் வீதி- ராஜராஜன் வீதி சந்திப்பில் சென்று  கொண்டிருந்தார். அப்போது 2 பைக்குகளில் 5 பேர் அவர்களை பின்தொடர்ந்தனர். அவருக்கு முன்பாக பைக்கில் சென்று 2 பேர், திடீரென நாட்டு வெடிகுண்டை வீசினர். இதில் அந்தோணி  மீது வெடிகுண்டு விழுந்து வெடித்ததில் பலத்த காயங்களுடன் சரிந்து  விழுந்தார்.

உஷாரான பாம் ரவி, பைக்கை அங்கேயே போட்டு விட்டு  தப்பியோடினார். அவரை கும்பல் துரத்திச் சென்று, ராஜராஜன் வீதி சந்திப்பில்  இருந்து காளியம்மன் தோப்பு வீதிக்கு செல்லும் ஒரு குறுகிய சந்தில் மடக்கி  சரமாரி வெட்டியது. வெடிகுண்டு  சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடி வந்து, இருவரையும் மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  ஆனால் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து ஊர்மக்கள் மற்றும் உறவினர்கள் திரண்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சட்டம் ஒழுங்கு சீனியர்  எஸ்பி லோகேஸ்வரன், எஸ்பி விஷ்ணுகுமார் மற்றும் போலீசார் விரைந்து  வந்து விசாரித்தனர். முதலியார்பேட்டை  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்துகின்றனர். பழிக்குப்பழியாக இக்கொலைகள்  நடந்திருக்கலாம் என்றும், இது தொடர்பாக 5 பேர் கும்பலை தேடி வருவதாகவும்  போலீசார் தெரிவித்தனர்.

தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு பணியாற்றியவர்

கொலை  செய்யப்பட்ட ரவி, உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலருக்கு  போட்டியிட திட்டமிட்டு இருந்தார். வாணரப்பேட்டை பகுதியில் மழையால் பழுதடைந்த தெரு, சாலைகளை  சீரமைப்பது உள்ளிட்ட சமூகப் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.  நேற்றும் இதுபோல் சாலைகளை சீரமைக்கும் பணிக்காக சென்றபோது தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

நண்பர் கொலை ஏன்?

பாம்  ரவி புதிதாக வீடு கட்டி  வந்துள்ளார். அந்த வீட்டின் கட்டுமான பணியை அந்தோணி தான் மேற்கொண்டு  வந்துள்ளார். ரவியைத்தான் அவரது எதிரிகள் குறி வைத்து வெடிகுண்டு  வீசியுள்ளனர். ஆனால் அது தவறுதலாக நண்பர் அந்தோணி மீது விழுந்து  வெடித்துள்ளது. இதில் அவர் பலத்த காயம் ஏற்பட்டு இறந்தார்.

கொலை காட்சி வீடியோ வைரல்

வெடிகுண்டு  மற்றும் அரிவாளால் வெட்டியதில் பாம் ரவி, அந்தோணி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். கொலை காட்சிகள் வீடியோ நேற்று மாலை  சமூகவலைதளத்தில் வைரலாக பரவியது. அதில், ஒரு பைக்கில் 2 பேர் வந்து  வெடிகுண்டு வீசுவதும், மற்றொரு பைக்கில் 3 பேர் வந்து, பாம் ரவியை  அரிவாளால் துரத்துவதும், வெட்டி முடித்தபிறகு அவர்கள் பைக்குகளில் ஏறி  தப்பிச் செல்லும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது.

Related Stories: