×

காஷ்மீர் மக்களை ஒதுக்கி வைத்த காலத்துக்கு முடிவு வந்து விட்டது: அமித்ஷா பேச்சு

ஜம்மு: ‘ஜம்மு காஷ்மீர் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைய முடியாமல் ஒதுக்கி வைக்கப்பட்ட நிலைமை, முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது,’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு, முதல் முறையாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு சென்றுள்ளார். ஜம்முவில் ரூ.210 கோடியில் கட்டப்பட்ட ஜம்மு ஐஐடியை நேற்று அவர் திறந்து வைத்தார். பின்னர், பகவதி நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியில் இனி யாரும் எந்த தடையையும் உருவாக்க முடியாது. ஏற்கனவே ஒன்றிய அரசு ரூ.12,000 கோடி மதிப்பிலான முதலீடுகளை இங்கு செய்துள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் ரூ.51,000 கோடியில் வளர்ச்சித் திட்ட பணிகளை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள இளைஞர்கள் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியில் இணைந்து விட்டால், தீவிரவாதிகளின் சதித்திட்டங்கள் தவிடு பொடியாகி விடும். வன்முறையில் பொதுமக்கள் யாரும் பலியாகக் கூடாது என்பதே அரசின் நோக்கம். ஜம்மு காஷ்மீரில் இருந்து தீவிரவாதத்தை முற்றிலும் துடைத்தெறிய வேண்டும். இந்திய தேசிய நீரோட்டத்தில் இணைய முடியாமல் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒதுக்கி வைக்்கப்பட்டு இருந்தனர். அது முடிவுக்கு வரும் நேரம் வந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

பாக். தீவிரவாதி சுட்டுக் கொலை
காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் மாவட்ட வனப்பகுதியில் பதுங்கி உள்ள பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை தேடும் பணி 14வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதில், மென்தார் வனப்பகுதியில் லஷ்கர் தீவிரவாத அமைப்பை சேர்ந்த முஸ்தபா என்ற தீவிரவாதி, பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த துப்பாக்கி சண்டையில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர். 14 நாள் தேடுதல் வேட்டையில் இதுவரை 9 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

கடும் பனிப்பொழிவு மேலும் 2 பேர் பலி
காஷ்மீரில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அனந்த்நக் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவில் சிக்கியவர்களில் சிலரை போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் கொண்ட குழுவினர் மீட்டனர். 2 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதுவரை கடும் பனிப்பொழிவில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனர்.

லடாக்கில் நிலநடுக்கம்
லடாக் யூனியன் பிரதேசத்தில் நேற்று 4.2 ரிக்டேர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலில் 140 கிமீ ஆழத்தில் இந்த மையம் இருந்தது. இதனால், எந்தவிதமான பொருட் சேதமோ, உயிர்ச் சேதமோ ஏற்படவில்லை.

Tags : Kashmir ,Amit Shah , Kashmir, Union Home Minister, Amit Shah,
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...