காங்கிரசில் உறுப்பினராக சேர அதிரடி நிபந்தனைகள்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக சேர புதிய நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், உறுப்பினராக சேர்பவர்களுக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கக் கூடாது, கட்சியை விமர்சிக்கக் கூடாது என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி தேர்தல் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என செயற்குழு கூட்டத்தில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி, கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி அடுத்த மாதம் 1ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில், புதிதாக கட்சியில் சேர்பவர்கள் சில விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால்தான் உறுப்பினராக முடியும். அதற்கான ஒப்புதல் படிவத்திலும் கையெழுத்திட வேண்டும். இதற்காக சில நிபந்தனைகள் கொண்ட படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

* அங்கீகரிக்கப்பட்ட காதி ஆடைகள் அணிவதை பழக்கமாகக் கொள்வேன்

* மது குடிக்க மாட்டேன், போதை மருந்துகளை பயன்படுத்தமாட்டேன்.

* சமூக ரீதியான பாகுபாட்டை எந்த விதத்திலும், வடிவத்திலும் பின்பற்ற மாட்டேன், அதை நம்பமாட்டேன். யாரையும் நீக்கவும் பயன்படுத்த மாட்டேன்

* மதம் மற்றும் சாதி பாகுபாடின்றி ஒருங்கிணைந்த சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்

* காங்கிரஸ் செயற்குழுவின்  ஆணைக்கு இணங்க குறைந்தபட்சம் களப்பணியாளராக நான் கட்சிக்காகப் பணியாற்றுவேன்.

* சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டி, அதிகமாக சொத்துக்களை வைத்திருக்க மாட்டேன்

* மதச்சார்பின்மை, சகோதரத்துவம், ஜனநாயகம் ஆகியவற்றின் கொள்கைகளை பரப்பும் நோக்கில் கட்சிக்காகப் பணியாற்றுவேன்.

*  கட்சியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை, திட்டங்களை, கட்சி்க்கு உரிய வழிமுறை தவிர்த்து வேறு எந்த வழியிலும், பொதுவெளியிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எதிர்மறையாக விமர்சிக்க மாட்டேன்.

* அனைத்து இந்தியர்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் உழைப்பேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் குழு கூட்டம் நாளை கூடுகிறது. இதில் உறுப்பினர் சேர்க்கை விவகாரம், புதிய நிபந்தனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

அனைவரும் பின்பற்ற வேண்டும்

காங்கிரசின் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரி கூறுகையில், ‘‘இந்த படிவம் ஏற்கனவே இருப்பதுதான். புதிதாக கட்சியில் இணைபவர்கள் உட்பட அனைத்து உறுப்பினர்களும் இப்படிவத்தில் கூறிய நிபந்தனைகளை பின்பற்றுவார்கள் என எதிர்பார்க்கிறோம்,’’ என்றார்.

Related Stories:

More
>