கொடைக்கானலில் விடிய விடிய கனமழை மலைச்சாலையில் 20 இடங்களில் மண்சரிவு: போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு

கொடைக்கானல்: தொடர்ந்து பெய்யும் கனமழையால், கொடைக்கானல் அருகே அடுக்கம் பகுதியில் மலைச்சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் கொடைக்கானல் - பெரியகுளம் இடையே போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று முன்தினம் இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை 49 மி.மீ. அளவிற்கு பதிவானது. கனமழை காரணமாக கொடைக்கானல் - அடுக்கம் - பெரியகுளம் மலைச்சாலையில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பல இடங்களில் மலைச்சாலை பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்துள்ளன.

இதனால், அப்பகுதியில் இருந்து கொடைக்கானல் அல்லது பெரியகுளம் பகுதிக்கு சென்று வர முடியாமல் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர். வாகனங்கள் செல்லமுடியாமல் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்வதால் சீரமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் நேற்று முன்தினம் கொட்டிய கனமழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, கரடி சோலை அருவி, பேரி பால்ஸ் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொடைக்கானல் ஏரி நிரம்பி வழிவதால், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கால் ஏரி கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: