×

பசுமை மாநகராட்சி திட்டத்தில் 87 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது: அதிகாரிகள் தகவல்

சென்னை: பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 87,004  மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில், சென்னை மாநகரை தூய்மையாக்கவும், அழகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகரில் உள்ள சுவரொட்டிகள் முழுவதும் அகற்றப்பட்டு விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டு வருவதோடு, பூங்காக்கள், ஏரிகள் புனரமைக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 87,004 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடசென்னை பகுதியில் 80 மரக்கன்றுகளும், மத்திய சென்னை பகுதியில் 132 மரக்கன்றுகளும், தென் சென்னை பகுதியில் 58 மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று ஒரே நாளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 270 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதன் மூலம், காற்று மாசு, ஒலி மாசு குறைவதோடு, இரண்டரை மடங்கு, கூடுதல் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும் என்றும், சுற்றுவட்டார பகுதிகள் பசுமையாக காட்சி அளிக்கும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தை விரிவுப்படுத்தி விரைவில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்படும் என்றும், பசுமைச் சென்னையாக மாற்றுவதே இலக்கு என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Green Corporation , Green Corporation, Saplings, Officials, Information
× RELATED பசுமை மாநகராட்சி திட்டத்தின் கீழ் 1.24 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது