‘ஒர்க் ப்ரம் ஹோம்’ல் ஐ.டி ஊழியர்கள் ஆம்னி பஸ்களில் தீபாவளி முன்பதிவு பெருமளவில் சரிந்தது: வாகன உரிமையாளர்கள் கவலை

சென்னை: கொரோனா பரவல் காரணமாக, பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்தே தற்போது பணியாற்றி வருகின்றனர். இதனால், ஆம்னி பஸ்களில் தீபாவளிக்கான முன்பதிவு பெரும் சரிவை சந்தித்துள்ளதாக, அதன் உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.  

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள், படிப்பு, பணி, தொழில்கள் உள்பட பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் வசித்து வருகின்றனர். எனவே, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், ரம்ஜான் விடுமுறைகளின்போது, தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், அரசு பஸ்கள் மட்டும் அல்லாது ஆம்னி பஸ்களிலும் கூட்டம் அலைமோதும்.  

இந்நிலையில் வரும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு அடுத்த நாட்கள் வெள்ளி, சனி, ஞாயிறாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான மக்களுக்கு 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை வழங்கப்படும். எனவே, சொந்த ஊர்களுக்கு செல்வோர் 3ம் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்வார்கள். இவர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக, ஏற்கனவே அறிவித்து விட்டது.  மேலும், முன்பதிவு மையங்களும் முழுவீச்சில் இயங்கி வருகிறது. ஆனால், ஆம்னி பஸ்களில் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் வசூல் சவாலை சந்தித்துள்ளனர்.

இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: கொரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக தீபாவளி பண்டிகைக்கு ஏராளமான மக்கள், ஆம்னி பேருந்துகளை பயன்படுத்துவார்கள். அப்போது கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. இதன்காரணமாக தீபாவளி நேரத்தில் தினசரி 1,500 பஸ்களை மட்டுமே இயக்கும் சூழ்நிலை உள்ளது. இதற்கு சென்னை, பெங்களூரு, ஐதராபாத்தில் உள்ள ஐடி நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்படாததே காரணம்.

இத்தகைய நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை, வீட்டில் இருந்தே பணியாற்றச் செய்து வருகிறது. இதனால், அவர்கள் வீடுகளிலேயே இருக்கிறார்கள். ஐடி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் ஆம்னி பஸ்களை பயன்படுத்துவார்கள் என்பதால் எங்களுக்கு தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தீபாவளி மட்டும் அல்லாது தினசரி இயக்கத்திலும் கூட சிக்கல் நிலவுகிறது. கொரோனாவுக்கு முன்பு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு தினசரி 200 ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றிச் செல்லும். ஆனால் தற்போது 50 பேருந்துகள் தான் இயங்குகிறது. இதேபோல் ஐதராபாத்துக்கு தினசரி 100 ஆம்னி பேருந்துகள் செல்லும். ஆனால் தற்போது 50க்கும் குறைவான பஸ்கள் தான் செல்கிறது. எனவே ஐடி நிறுவனங்கள் முழுமையாக திறக்கப்பட்ட பிறகு தான், ஆம்னி பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: