×

கூடுதல் தளர்வுகள், ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: கொரோனா ஊரடங்கு கூடுதல் தளர்வுகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை காசிமேடு துறைமுகத்தில் நேற்று மீன்வாங்க கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் கடந்த வாரத்தை விட மீன்கள் விலை 30 சதவீதம் அதிகரித்து காணப்பட்டது. புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானவர்கள் அசைவம் சாப்பிடுவது இல்லை. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி அக்டோபர் 17ம் தேதி முடிவடைந்தது. இந்த நாட்களில் மீன், கோழி, ஆடு விற்பனை மந்தமாக இருந்தது. இந்த நிலையில் கடந்த வாரத்துடன் புரட்டாசி மாதம் முடிவடைந்து ஐப்பசி மாதம் தொடங்கியது. ஐப்பசி மாதம் தொடங்கியதும் மக்கள் அசைவ உணவை நாட தொடங்கினர். இதனால், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையை தமிழகம் முழுவதும் மீன், சிக்கன், மட்டன் விற்பனை விறுவிறுப்படைந்தது. சென்னையை பொறுத்தவரை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. அதே நேரத்தில் டீசல் விலை உயர்வு, குறைந்த அளவில் படகுகள் மீன் பிடிக்க சென்றது போன்ற காரணங்கள் மீன்கள் விலை 20 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்தது. இருந்த போதிலும் விலையை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர். இந்த விலை உயர்வு என்பது குறைவு தான். வரும் நாட்களில் இன்னும் மீன் விலை உயர தான் வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கொரோனா ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடு தளர்வுகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதாவது கடைகள் அனைத்தும் 24 மணி நேரம் இயங்கலாம். பஸ்களில் 100 சதவீதம் அமர்ந்து பயணிக்கலாம் என்பது உள்பட பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகள் உடனடியாக அமலுக்கும் வந்தது. அரசின் அறிவிப்பை தொடர்ந்து கொரோனாவுக்கு முன்னர் இருந்தது போல கடைகள் வழக்கம் போல செயல்பட தொடங்கியுள்ளன. இதனால், ஓட்டல்களுக்கு தேவையான மீன்களை வாங்கவும், பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமையை அசைவ உணவுடன் கொண்டாடும் வகையில் மீன்களை வாங்கவும் நேற்று காலை முதல் சென்னை காசிமேடு துறைமுகத்திற்கு வரத் தொடங்கினர். இதனால், கடந்த வாரத்தை விட காசிமேட்டில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதே நேரத்தில் குறைந்த அளவிலான விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் சென்று திரும்பினர். இதனால் நேற்று மீன்கள் விலை கடந்த வாரத்தை விட 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்து காணப்பட்டது. ஆனால், விலையை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் மீன்களை வாங்கி சென்றனர். அதே போல் சிந்தாதிரிப்பேட்டை மீன்மார்க்கெட், பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இது குறித்து அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறியதாவது:

டீசல் விலை உயர்வு காரணமாக இன்னும் குறைந்த அளவிலான விசைபடகுகளிலேயே மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். அதில் நேற்று தரமான உயர்ரக மீன்கள் கொண்டுவரப்பட்டிருந்தது. இதனால், மீன் பிரியர்கள் ஆர்வத்துடன் விலை உயர்வை கூட பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கினர். கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீன் விலை 30 சதவீதம் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் 550க்கு விற்ற வஞ்சிரம் மீன் கிலோ 740 ஆக உயர்ந்துள்ளது. கறுப்பு வவ்வால் 400லிருந்து 500, சங்கரா  220லிருந்து 310, கடவா 180லிருந்து 300, நண்டு 200லிருந்து 290, இறால் 300லிருந்து 400, சீலா 350லிருந்து 450, நெத்திலி 240லிருந்து 300 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல் தரத்தை பொறுத்து விலை கொடுத்து பொதுமக்கள், வியாபாரிகள் மீன்களை வாங்கி சென்றனர். இந்த விலை உயர்வு மீனவர்களுக்கு போதுமானதாக இல்லை. தற்போது டீசல் விலை 100 தாண்டியுள்ளது. மீனவர் தரப்பில் செலவுக்கு இந்த விலை கட்டுப்படியாகவில்லை என்று வேதனையில் இருந்து வருகின்றனர். இதனால், டீசலுக்கு முழுமையான வரிவிலக்கை எதிர்ப்பார்த்து அவர்கள் இருக்கிறார்கள். மானியத்தை மத்திய, மாநில அரசுகள் இரண்டும் வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். மீன்பிடி தொழில் ஏற்கனவே ஐசியூவில் இருந்தது. இப்போது அது கோமா நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. இதனை நவீனப்படுத்த மீனவர்களுக்கு மீன்வள பூங்கா அமைக்க வேண்டும். மீன்விலை மீனவர்களுக்கு போதுமானதாக இல்லாததால் இன்னும் விலை அதிகரிக்க தான் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். காசிமேட்டில் இருந்து மீன்களை வாங்கி சில்லறையில் விற்பவர்கள் கிலோவுக்கு 30 முதல் 50 வரை தரத்திற்கு ஏற்றார் போல் அதிகரித்து விற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kasimeddu port ,Chennai , Chennai Kasimedu
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...