×

88 ஆண்டுகால வரலாற்றில் 67வது முறையாக 100 அடியை தாண்டியது மேட்டூர் அணை

மேட்டூர்: மேட்டூர் அணையின் 88ஆண்டுகால வரலாற்றில் நேற்று 67வது முறையாக நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று முன்தினம் 39,634 கனஅடியாக அதிகரித்தது. இதனிடையே, மழை சற்று தணிந்துள்ளதால், நேற்று காலை நீர்வரத்து 28,650 கனஅடியாக குறைந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 100 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 550 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 97.80 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 11 மணி அளவில்100 அடியை எட்டியது. நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் நீர்மட்டம் 101.14 அடியாக உயர்ந்தது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் விநாடிக்கு 28 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இருப்பினும் மெயின் அருவி, சினி பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகிறது. இதனால், பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தொடர்ந்து தடை நீடிக்கிறது.

கடந்த நீர்ப்பாசன ஆண்டில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 4 முறை 100 அடியை எட்டியது. நடப்பாண்டு 1.1.21ம் தேதி 105.28 அடியாக இருந்த நீர்மட்டம், படிப்படியாக குறைந்து கடந்த 1.10.21ம் தேதி 72.68 அடியானது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வலுத்ததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூர் அணை நீர்மட்டம் அடுத்தடுத்த நாட்களில் உயர்ந்து 88 ஆண்டு கால வரலாற்றில், 67வது முறையாக நேற்று 100 அடியை எட்டியது. கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி, மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியில் இருந்து சரிந்த நிலையில், 210 நாட்களுக்கு பிறகு மீண்டும் 100 அடியாக உயர்ந்துள்ளது. ஜனவரி மாத இறுதி வரை டெல்டா பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால், காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூர் அணை மீனவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியதை அடுத்து, அணையின் இடது கரையில் 16 கண் மதகு அருகே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மேட்டூர் சதாசிவம் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு பூஜை செய்து, மலர் தூவி காவிரித்தாயை வணங்கினர். நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையில் நீர்மட்டம் 101.14 அடியாக உயர்ந்தது.

Tags : Mattore Dam , Mettur Dam
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75.29 அடியில் இருந்து 75.76 அடியாக உயர்வு