×

ஜி-20, பருவநிலை மாநாடுகளில் பங்கேற்க இத்தாலி, இங்கிலாந்து செல்கிறார் மோடி: 29 முதல் நவம்பர் 2 வரை 5 நாள் பயணம்: வாடிகனில் போப் ஆண்டவரை சந்திக்கவும் முடிவு

புதுடெல்லி: ஜி-20 மற்றும் கிளாஸ்கோ பருவநிலை மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி, இங்கிலாந்து நாடுகளுக்கு 5 நாள் பயணமாக செல்கிறார். வரும் 29ம் தேதி இத்தாலி செல்லும் அவர், வாடிகனில் போப்பாண்டவரை சந்தித்து பேச உள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களை தவிர்த்த பிரதமர் மோடி, ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, கடந்த மாதம் ஐநா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்காவுக்கு 4 நாள் பயணமாக சென்றார். அங்கு, அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை முதல் முறையாக சந்தித்து பேசினார். இதையடுத்து, தற்போது ஜி-20 மற்றும் ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி 5 நாள் பயணமாக இத்தாலி, இங்கிலாந்து நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார். வரும் 29ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இத்தாலி செல்லும் அவர் வாடிகனில் போப்பாண்டவரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார். பின்னர், ரோம் நகரில் வரும் 30, 31ம் தேதிகளில் நடக்க உள்ள ஜி-20 மாநாட்டில் பங்கேற்கிறார். ஜி-20 அமைப்பு சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பாகும். இந்த மாநாட்டில் ஜி-20 உறுப்பு நாடுகளின் தலைவர்களும், ஐரோப்பிய யூனியன் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

கொரோனா தொற்றுக்கு பிறகு பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வது, பருவநிலை மாற்றம், வறுமை ஒழிப்பு, உலகின் பல பகுதிகளில் நிலவும் சமத்துவமின்மை ஆகியவை குறித்து மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது. இதில், பிரதமர் மோடி உலகம் சந்திக்கும் முக்கிய சவால்களை எதிர்த்து போராடுவதில் இந்தியாவின் நிலை குறித்தும், ஆப்கானிஸ்தான், கொரோனா தொற்று, பருவநிலை மாற்றம் ஆகிய பிரச்னைகளில் உலகம் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்த உள்ளார்.

மாநாட்டின் இடையே பிரதமர் மோடி, இத்தாலி பிரதமர் டிராகி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இரு தரப்பு உறவு மற்றும் வர்த்தக உறவை வலுப்படுத்த உள்ளார். இத்தாலி பயணத்தை தொடர்ந்து வரும் 1ம் தேதி இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகருக்கு மோடி செல்கிறார். அங்கு, ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாடான சிஓபி-26-ல் பங்கேற்கிறார். இந்த மாநாடு வரும் 31 முதல் நவம்பர் 12ம் தேதி வரை நடக்கிறது. இதில், உலக தலைவர்கள் மாநாடு நவம்பர் 1 மற்றும் 2ம் தேதிகளில் நடைபெறும். மொத்தம் 120 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

கடைசியாக, கடந்த 2015ல் பாரீசில் நடந்த சிஓபி-21 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அம்மாநாட்டில், உலகின் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுப்பது என மிக முக்கியமான பாரீஸ் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கிளாஸ்கோ மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, சமீபகாலமாக பல நாடுகளிலும் வரலாறு காணாத மழை, காட்டுத் தீ, எரிமலை வெடிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், பருவநிலை மாற்றம் தொடர்பான முக்கிய முடிவுகள் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : G-20 ,Italy ,England ,Modi ,Vatican ,Pope ,Lord , UK, Modi
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்