டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல்: வரலாற்றை தொடருமா இந்தியா?

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் 7வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு துவங்குகிறது. ஒருநாள் போட்டி உட்பட உலகக்கோப்பை வரலாற்றில் இந்திய அணியை, பாகிஸ்தான் அணி இதுவரை வென்றதில்லை. தற்போது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சூப்பர் ஃபார்மில் உள்ளதால், இந்த வரலாற்றை இந்தியா தக்க வைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் விடுமுறை நாளில் நடப்பதால் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 7வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று மதியம் 3.30 மணிக்கு ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் இலங்கை-வங்கதேச அணிகள் மோதுகின்றன.

இரவு 7.30 மணிக்கு துபாயில் நடைபெறும் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.  உலகக்கோப்பை வரலாற்றில் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டி உட்பட பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் இதுவரை இந்திய அணியே வென்றுள்ளது. உலக கோப்பையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரே போட்டி இதுதான். பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதால் வீரர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ஒரு வாரத்திற்கு முன்பே பரபரப்பு தொற்றிக்கொண்டது. தற்போது விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சூப்பர் பார்மில் உள்ளது. ரோகித்சர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் என அதிரடி பேட்ஸ்மேன்கள் அனைவரும் நல்ல பார்மில் உள்ளனர். பந்துவீச்சில் பும்ரா, ஷமியுடன் சுழலில் வருண் சக்ரவர்த்தியும் அசத்த காத்திருக்கிறார். டோனியின் ஆலோசனை வேறு கூடுதல் உத்வேகம் அளிக்கிறது. மேலும் விடுமுறை நாளில் நடப்பதால் ரசிகர்கள் எக்கச்சக்க எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மறுபுறம் பாகிஸ்தான் அணி இந்த முறை எப்படியாவது உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்திவிட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்குகிறது. கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பஹார் ஜமானுடன் மூத்த வீரர்கள் சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் வலு சேர்க்கின்றனர். பந்து வீச்சில் ஷாகின்ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி மிரட்டுவார்கள். இரு அணிகளும் வெற்றியுடன் தொடங்க முனைப்பு காட்டும் என்பதால் துபாயில் அனல்பறக்கும் என எதிர்பார்க்கலாம். தவிர, ‘இன்றைய போட்டியில் எங்கள் அணியில் இடம் பெறவுள்ள வீரர்கள் இவர்கள்தான் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் நேற்றே வெளிப்படையாக அறிவித்து விட்டார். இந்திய அணியில் இடம் பெறும் வீரர்கள் குறித்த அறிவிப்பை இன்று டாஸ் போட்ட பின்னர் விராட் கோஹ்லி அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தியா உத்தேச அணி: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோஹ்லி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ஷர்துல் தாகூர்.

பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), பஹார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, ஹசன் அலி, ஷதாப் கான், இமாத் வாசிம், ஷாகின் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.

Related Stories: