×

ஆன்லைன் பட்டா மாற்ற மனுக்கள் மீது 3 மாதத்தில் நடவடிக்கை: அறிக்கையளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆன்லைன் பட்டா மாற்றம் கோரிய மனுக்களின் மீது 3 மாதத்தில் நடவடிக்கை எடுத்து அறிக்கையளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆன்லைன் பட்டா மாறுதல் செய்யக் கோரி பல மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் விசாரித்தார். அப்போது நில அளவை கூடுதல் இயக்குநர் கண்ணபிரான் ஆஜராகி, ‘‘பட்டா மாறுதல் கோரிய ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த மார்ச் 31 வரை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 994 மனுக்கள் நிலுவையில் இருந்தன. ஏப்.21 வரை மொத்தமாக 6 லட்சத்து 89 ஆயிரத்து 632 மனுக்கள் பெறப்பட்டன. மொத்தமாக 8 லட்சத்து 40 ஆயிரத்து 576 மனுக்களில் செப்.21 வரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 448 மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டது. அக்.1 வரையில் ஒரு லட்சத்து 2,128 மனுக்கள் நிலுவையில் உள்ளன’’ என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், டிச.2020 வரை 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருந்ததாகவும், மாதந்தோறும் 1.18 லட்சம் மனுக்கள் பெறப்படுவதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

நில அளவைத் துறையில் பணியிடங்கள் போதுமானதாக இல்லை என்றும், 70 சதவீத கள உதவியாளர் மற்றும் 40 சதவீத சர்வேயர் பணியிடங்கள் காலியாகவும் உள்ளன.
இவற்றை நிரப்ப மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து கூடுதல் அட்வகேட் தரப்பில் அறிக்கை பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.அதே நேரம் நிலுவை மனுக்களின் மீது 3 மாதத்தில் தீர்வு காணப்படும் என கூடுதல் இயக்குநர் உறுதியளித்துள்ளார். எனவே, விரைவாக இந்த மனுக்களின் மீது தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அக்.26ல் அறிக்கையளிக்க வேண்டுமென கூறியுள்ள நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.

Tags : Icord , Online Patta, Petition, within 3 months, Icord Branch
× RELATED நெல்லையில் ஆசிரியருக்கு பணி ஒப்புதல்...