×

சமூக நீதி கண்காணிப்பு குழுவுக்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சமூகநீதி கண்காணிப்புக் குழுவிற்கு தலைவராக சுப.வீரபாண்டியன் மற்றும் 6 உறுப்பினர்களை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு:  சமூகநீதி அளவுகோலானது சட்டப்படி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக தமிழ்நாடு அரசால் சமூகநீதி கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் எனவும், இக்கண்காணிப்புக் குழு, கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும், வழிகாட்டும், செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும். சமூகநீதி அரசாணையின் நூற்றாண்டு நாளினையொட்டி முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.    

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து, ‘சமூகநீதிக் கண்காணிப்புக் குழுவினை’ அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தலைவராக பேராசிரியர் சுப.வீரபாண்டியன், உறுப்பினர்களாக-  கே.தனவேல் (ஐ.ஏ.எஸ் ஓய்வு), சுவாமிநாதன் தேவதாஸ், கவிஞர் மனுஷ்யபுத்திரன்,  ஏ.ஜெய்சன், ஆர்.ராஜேந்திரன், கோ.கருணாநிதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  சமூகநீதி அளவுகோல், முறையாக முழுமையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை கண்காணித்து, அவை முழுமையாக பின்பற்றப்படாவிட்டால், உரிய நடவடிக்கையை மேற்கொள்ள அரசுக்கு அவ்வப்போது தமது பரிந்துரைகளை வழங்கும். இக்குழுவில் சமூகச் சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் உறுப்பினர் செயலராக அங்கம் வகிப்பார்.


யார்... யார்? சமூகநீதி கண்காணிப்பு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்கள்

குழு தலைவர் சுப.வீரபாண்டியன்: சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளை தமிழ்நாடு முழுவதும் பரப்பி, அரை நூற்றாண்டுக்கும் மேலாக சமூகநலன் குறித்து  பேசியும் எழுதியும் வருபவர். கே.தனவேல்: ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அலுவலர். ஒன்றிய அரசிலும், மாநில அரசிலும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். சுவாமிநாதன் தேவதாஸ்: 40 ஆண்டுகளாக பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் மற்றும் தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் பணிபுரிந்த நீண்ட அனுபவம் பெற்றவர். மேலும் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இணை துணைவேந்தராக பணிபுரிந்தவர்.

கவிஞர் மனுஷ்ய புத்திரன்: இந்தியாவின் உயரிய தேசிய விருதுகளில் ஒன்றான சன்ஸ்கிருதி சம்மான் விருதினைப் பெற்றவர்.  ஜெய்சன்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் நீண்ட அனுபவம் கொண்டவர். ஆர்.ராஜேந்திரன்: கடந்த 36 ஆண்டுகளாக கல்விப் பணியாற்றியவர். பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர். கோ.கருணாநிதி: அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூகநீதியை பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அறிமுகம் செய்தவர்.



Tags : Social Justice Monitoring Committee ,Chief Minister ,MK Stalin , Social Justice, Monitoring Committee, Chairman, MK Stalin
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...