×

ஐகோர்ட் அலுவலக, நூலக உதவியாளர் பணிகளில் 3ம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு கோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அலுவலக உதவியாளர்கள், நூலக உதவியாளர்கள் தேர்வில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசும், உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரும் பதிலளிக்குமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.  ஐகோர்ட்டுக்கு அலுவலக உதவியாளர், நூலக உதவியாளர் பணியிடங்களுக்கு தலைமைப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்த இட ஒதுக்கீடும் வழங்கவில்லை எனக் கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த கிரேஸ் பானு என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  

அந்த மனுவில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 2019ம் ஆண்டு இயற்றப்பட்ட மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு ஏதும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் 30 ஆயிரம் மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ள நிலையில் மூன்றாம் பாலினத்தவருக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு அக்டோபர் 27ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அரசுக்கும், ஐகோர்ட்தலைமைப் பதிவாளருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Tags : iCourt , Icord Office, Library Assistant, 3rd gender, reservation
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...