×

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியது திமுக: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், அனைத்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியிடத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. 9 மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 74 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான தலைவர் தேர்தல், தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய 73 பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 68 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 3 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை.

அதேபோல், 74 ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்கான துணைத் தலைவர் தேர்தல், தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டது. எஞ்சிய 73 பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 62 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 5 பதவியிடங்களுக்கு குறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடைபெறவில்லை. கோவை, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற மறைமுகத் தற்செயல் தேர்தலில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடத்தில் திமுக, கோவை மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கரூர் மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதிவியிடத்திற்கு தேர்தல் நடைபெறவில்லை.

மறைமுகத் தேர்தல்களில் 6 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவியிடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 4 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பதவியிடத்திற்கு தேர்தல் நடைபெறவில்லை. 13 ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் பதவியிடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 7 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், பாமக ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 3 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை.

Tags : DMK ,State Election Commission , 9 District, Local Election, DMK, State Election Commission
× RELATED இந்தியாவிலேயே அதிகம் கேரளாவில் தான் இளம் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு