×

உலக கோப்பை டி20ல் இன்று இந்தியா - பாகிஸ்தான் மோதல்: ஆதிக்கத்தை தொடருமா இந்தியா

துபாய்: ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று 2வது பிரிவு லீக் ஆட்டத்தில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30க்கு தொடங்குகிறது. உலக கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டங்கள் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பையில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானுக்கு எதிராக முழுமையான ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளதில், அனைத்திலும் இந்திய அணியே வெற்றி வாகை சூடியுள்ளது.

இந்த வெற்றிகள் அனைத்தும் தோனி தலைமையில் கிடைத்தவை. இப்போது முதல் முறையாக கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அனைத்து வகையிலும் அணி வலுவானதாக இருந்தாலும், பாகிஸ்தானுடன் மோதும்போது முழு திறமையையும் வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றி வசமாகும் என்பதை இந்திய வீரர்கள் உணர்ந்துள்ளனர். ஷாகீன் அப்ரிடி வேகம், இமத் வாசிம் சுழல் மற்றும் கேப்டன் பாபர் ஆஸமின் உறுதியான பேட்டிங் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்.

* கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா விளையாடிய 115 சர்வதேச டி20 போட்டிகளில் 73ல் வென்றுள்ளது. 2 போட்டிகள் சரிசமனில் முடிந்த நிலையில், 37ல் தோல்வி கண்டுள்ளது. 3 போட்டிகளில் முடிவு இல்லை. வெற்றி விகிதம் 63.5%.
* பாகிஸ்தான் அணி கடந்த 10 ஆண்டுகளில் விளையாடிய 129 சர்வதேச டி20 போட்டிகளில் 77ல் வென்றுள்ளது. 2 போட்டிகள் ‘டை’ ஆன நிலையில், 45ல் தோல்வியைத் தழுவியுள்ளது. 5 போட்டிகளில் முடிவு இல்லை. வெற்றி விகிதம் 59.7%.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷண், ஷர்துல் தாகூர், ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், வருண் சக்ரவர்த்தி, ராகுல் சாஹர்.
பாகிஸ்தான்: பாபர் ஆஸம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பகார் ஸமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, இமத் வாசிம், ஷதாப் கான், ஹரிஸ் ராவுப், ஹசன் அலி, ஷாகீன் ஷா அப்ரிடி, ஹைதர் அலி.

Tags : India ,Pakistan ,World Cup T20 , World Cup, T20, India - Pakistan, clash
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை