×

தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

அபுதாபி: தென் ஆப்ரிக்க அணியுடனான சூப்பர் 12 சுற்று லீக் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 12 சுற்று நேற்று தொடங்கியது. முதல் பிரிவில் நடந்த தொடக்க லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா மோதின. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. கேப்டன் தெம்பா பவுமா, டி காக் இருவரும் தென் ஆப்ரிக்க இன்னிங்சை தொடங்கினர்.பவுமா 12 ரன் எடுத்து மேக்ஸ்வெல் சுழலில் கிளீன் போல்டானார். வாண்டெர் டுஸன் 2, டி காக் 7 ரன் எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்கா 23 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. ஒரு முனையில் எய்டன் மார்க்ரம் பொறுப்புடன் விளையாட... கிளாஸன் 13, டேவிட் மில்லர் 16, பிரிடோரியஸ் 1, மகராஜ் (0) ஆகியோர் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர்.

மார்க்ரம் 40 ரன் (36 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஸ்டார்க் வேகத்தில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார். அன்ரிச் நார்ட்ஜ் 2 ரன்னில் பெவிலியன் திரும்ப, தென் ஆப்ரிக்கா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்தது. காகிசோ ரபாடா 19 ரன்னுடன் (23 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஸ்டார்க், ஹேசல்வுட், ஆடம் ஸம்பா தலா 2 விக்கெட், மேக்ஸ்வெல், கம்மின்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 119 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 7.5 ஓவரில் 38 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் (0), வார்னர் 14, மிட்செல் மார்ஷ் 11 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். இந்த நிலையில், ஸ்மித் - மேக்ஸ்வெல் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தனர்.

ஸ்மித் 35 ரன் (34 பந்து, 3 பவுண்டரி), மேக்ஸ்வெல் 18 ரன் எடுத்து வெளியேற, ஆஸி. அணி 15.2 ஓவரில் 81 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து மீண்டும் தடுமாறியது. எனினும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் - மேத்யூ வேடு ஜோடி உறுதியுடன் விளையாடி வெற்றியை வசப்படுத்தியது. ஆஸி. அணி 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்து வென்றது. ஸ்டாய்னிஸ் 24 ரன் (16 பந்து, 3 பவுண்டரி), வேடு 15 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் அன்ரிச் 2, ரபாடா, மகராஜ், ஷம்சி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
ஹேசல்வுட் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. 


Tags : Australia ,South Africa , South Africa, fell, Australia
× RELATED ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் தொடர் அட்டவணை