தீபாவளிக்கு தமிழ்த்தறி பட்டுப்புடவை ரேஷன் கடைகளில் பனை வெல்லம் விற்பனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை:  தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சி கழகத்தின் தொடர் முயற்சியால் கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச் சிற்பம் ஆகிய கைவினை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் பெறப்பட்ட புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் வெளியிட்டார். மேலும்,  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழரின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நவீனமும் கலந்த புதிய வடிவமைப்புகள் மற்றும் வண்ணங்களை கொண்டு கைத்தறி நெசவாளர்களால் உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் பட்டு சேலைகள் 100 புதிய வடிவமைப்புகள், ஆரணி பட்டு சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், திருபுவனம் பட்டு சேலைகள் 50 புதிய வடிவமைப்புகள், சேலம் மற்றும் கோயம்புத்தூர் பட்டு சேலைகள் 200 புதிய வடிவமைப்புகள், சின்னாளப்பட்டி பட்டு / பருத்தி சேலைகள் 75 புதிய வடிவமைப்புகள், நெகமம் பருத்தி சேலைகள் 40 புதிய வடிவமைப்புகள், திண்டுக்கல் மற்றும் பரமக்குடி பருத்தி சேலைகள் 80 புதிய வடிவமைப்புகள், லினன் சேலைகள் 25 புதிய வடிவமைப்புகள், ஆடவருக்கான கைலிகள் 75 புதிய வடிவமைப்புகள், பவானி கோர்வை ஜமக்காளம் 30 புதிய வடிவமைப்புகள் மற்றும் குழந்தைகளுக்கான காஞ்சிபுரம் பட்டுப்பாவாடை மற்றும் சட்டை 50 புதிய வடிவமைப்புகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் வாயிலாக “தமிழ்த்தறி” என்ற தொகுப்பினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் பட்டு சேலை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சரிகையில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி அளவீடுகள் மற்றும் நம்பகத்தன்மையினை உறுதி செய்யும் வகையில் இந்தியாவில் முதன்முதலாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சரிகை உத்தரவாத அட்டையை முதல்வர் அறிமுகப்படுத்தினார். குழந்தைகளுக்கான புதிய ஆர்கானிக் ஆடை ரகங்களையும் முதல்வர் அறிமுகப்படுத்தினார்.  நவீன காலத்திற்கேற்றவாறு சந்தையில் உள்ள இதர சோப்புகளுக்கு இணையாக ரோஸ், லேவண்டர், சந்தனம் மற்றும் செஞ்சந்தனம்  எனும் 4 வகையான நறுமணங்களில்  125 கிராம் அளவுகளில் மக்கள் விரும்பும் வண்ணம் நவீன வடிவமைப்பிலான அட்டைப்பெட்டிகளில், வாரிய கதரங்காடிகள் மற்றும் சந்தையில் பிரசித்திப்பெற்ற பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார்.  

பனை தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் நியாய விலை கடைகள் மூலம்  பனை வெல்லம்  விற்பனை செய்யும்  திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் கடலாடி ஊராட்சி ஒன்றியம்  சாயல்குடியில் “ராமநாதபுரம் - சிவகங்கை”  மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு விற்பனை சம்மேளனத்திற்கு சொந்தமான இடத்தில், பனை தொழிலை மேம்படுத்திடும் நோக்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ்  ரூ.53.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பனை வெல்லம் மற்றும் பனை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories:

More
>