வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது: கெட்டிசமுத்திரம் ஏரிக்கு உபரிநீர் திறப்பு

அந்தியூர்: தொடர் மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணை நிரம்பியது. இதைத்தொடர்ந்து கெட்டிசமுத்திரம் ஏரிக்கு உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர், பர்கூர் வனப்பகுதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான பர்கூரின் மேற்கு மலைப் பகுதி, கல் மடுவு பள்ளம், வரட்டுப்பள்ளம் பகுதிகளில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தியூரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள வரட்டுப்பள்ளம் அணை கடந்த ஒரு வாரத்தில் கிடுகிடுவென நீர் மட்டம் உயர்ந்தது.

நேற்று அதிகாலை அணையின் மொத்த கொள்ளளவான 33.47 அடியை எட்டியது. அணைக்கு வரும் 150 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக மேற்கு புறமுள்ள காக்காயனூர் கால்வாயில் வெளியேறி வருகிறது. இந்த அணை நீர் விவசாயத்திற்கு மட்டுமின்றி, மீன் வளர்ப்பிற்கும், பொதுமக்களின் குடிநீர் தேவைக்கும், வனவிலங்குகளின் தாகம் தீர்க்கவும் பயன்பட்டு வருகிறது. வெளியேறும் உபரிநீர் காக்காயனூர், சங்கராப்பாளையம் வழியாக கெட்டி சமுத்திரம் ஏரிக்கு சென்று கொண்டுள்ளது.

வரட்டுப்பள்ளம் அணை கடந்த மூன்று ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக நிரம்பியதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகளும், மீனவர்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறும் பகுதிகளை அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாச்சலம், தாசில்தார் விஜயகுமார், சங்கரன் பாளையம் ஊராட்சி தலைவர் குருசாமி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Related Stories:

More
>