தென் மாவட்ட ரயில் திட்டங்களுக்கு தெற்கு ரயில்வே போடும் முட்டுக்கட்டை: பட்ஜெட் ஆயத்த கூட்டத்தில் எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப முடிவு

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே சார்பில் நடக்கும் பட்ஜெட் ஆயத்த கூட்டத்தில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு போடும் முட்டுக்கட்டை உடைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன், அகில இந்திய அளவில் ரயில்வே கால அட்டவணை மாநாடு நடைபெற்று பல்வேறு புதிய ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு திட்ட கருத்துரு தயார் செய்து ரயில்வே வாரியத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2022-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டி அதற்கான ஆயத்த பணிகளை ரயில்வே துறை தொடங்கி உள்ளது.

தெற்கு ரயில்வே பகுதிகளில் நடைபெற வேண்டிய ரயில்வே திட்ட பணிகள், புதிய ரயில்கள் இயக்குதல் தொடர்பாக  பொது மேலாளர் தலைமையில் திருச்சி, மதுரை, திருவனந்தபுரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவாதிக்கும் வகையில் சென்னை, சேலம், திருச்சி, பாலக்காடு, திருவனந்தபுரம் கோட்டத்தை ேசர்ந்த எம்.பி.க்களுக்கு தனித்தனியாக தெற்கு ரயில்வே சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அனுப்பப்பட்ட கடிதத்தின் படி பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்னதாகவே தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

குமரி மாவட்டம் முழுவதும் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் வருவதால் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாநிலங்களவை எம்.பி. விஜயகுமார் ஆகியோர் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். நவம்பர் 2 வது வாரத்தில் கூட்டம் நடைபெறும் என தெரிகிறது. இதற்கு முன், கடந்த 2019ம் ஆண்டு எம்.பி.க்களின் கூட்டத்தில் தமிழக எம்.பிக்கள் பல்வேறு ரயில்வே கோரிக்கைகளை சமர்ப்பித்து விவாதித்தனர். இதில் உள்ள கோரிக்கைகளில் சுமார் 5 சதவீத கோரிக்கைகள் கூட நிவர்த்தி செய்யப்பட வில்லை.

குறிப்பாக மதுரை, திருநெல்வேலி வழியாக ஐதராபாத் - கன்னியாகுமரி இடையிலான ரயில் திட்டம் கிடப்பில் உள்ள முக்கிய ரயில் திட்டங்களில் ஒன்றாகும். அதாவது தாம்பரத்திலிருந்து ஐதராபாத்துக்கு இயக்கப்பட்டு வரும் 12759 - 12760 சார்மினார் ரயிலை, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க இந்த ஆண்டு நடந்த ரயில்வே கால அட்டவணை மாநாட்டில் முன் மொழியப்பட்டது. ஆனால் சென்னையை தலைமையிடமாக கொண்ட தெற்கு ரயில்வே மண்டலம் இந்த திட்ட கருத்துருக்கு அனுமதி அளிக்கவில்லை. தெற்கு ரயில்வே ஏன் அனுமதி அளிக்கவில்லை என்ற காரணத்தையும் குறிப்பிட்டுள்ளது.

கன்னியாகுமரி ரயில் நிலையம் இடநெருக்கடியாக இருக்கின்ற காரணத்தாலும், தாம்பரம் முதல் கன்னியாகுமரி வரை வழித்தட பிரச்னை இருக்கின்ற காரணத்தாலும் இந்த ரயிலை நீட்டிப்பு செய்து இயக்க முடியாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஐதராபாத்துக்கு இயக்கப்பட்டு வரும் மூன்று ரயில்களில் மற்றொரு ரயிலான 12603 - 12604 ரயிலை கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த ரயிலை இயக்குவது தெற்கு ரயில்வே மண்டலம் ஆகும். இது மட்டுமில்லாமல் நீட்டித்து இயக்கப்படும் பகுதியும் அதாவது கன்னியாகுமரியும், தெற்கு ரயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட பகுதி ஆகும். ஆகவே இந்த ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டித்து இயக்க தெற்கு ரயில்வே தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வை்ககப்பட்டது. இந்த கோரிக்கையையும் தெற்கு ரயில்வே கண்டு கொள்ள வில்லை.

சார்மினார் ரயில் குமரி வரை நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் சிவகுமார் கூறியது: தாம்பரம் - ஐதராபாத் சார்மினார் ரயில் தற்போது ஐதராபாத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.55 க்கு தாம்பரம் வந்தடைகின்றது. தாம்பரத்திலிருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டால் 12 மணி நேரத்தில் அதாவது அதே நாள் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் கன்னியாகுமரிக்கு வந்தடையும். இதைப்போல் மறுமார்க்கமாக தற்போது இந்த சார்மினார் ரயில் கன்னியாகுமரியிலிருந்து அதிகாலை 3. 30 முதல் 4.30 மணிக்கு புறப்பட்டால் தாம்பரத்துக்கு மாலை 5 மணிக்குள் சென்றுவிடும்.

இந்த சார்மினார் ரயிலை நீட்டிப்பு செய்வதால் தலைநகரான சென்னைக்கு பகல்நேரத்தில் பயணம் செய்ய கூடுதலாக ஓர் ரயில் வசதி கிடைக்கும். இதைப்போல் பகல்நேரத்தில் மதுரை, திருச்சி, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு பயணம் செய்ய தினசரி ரயில் சேவை கிடைக்கும். உயர்நீதிமன்றம் அமைந்துள்ள மதுரைக்கு காலையில் அலுவல் நேரத்துக்கு செல்ல ஓர் தினசரி ரயில் சேவை கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு ஆகும். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் மூன்று நடைமேடைகள் இருப்பதால் எளிதாக கூடுதலாக ஒரு ரயிலை நிறுத்தி வைக்க முடியும்.

நிலைமை இவ்வாறு இருக்க தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஏன் கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இடநெருக்கடியாக இருக்கிறது என்று கூறுகிறார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது என்றார். சார்மினார் ரயில் ஐதராபாத் ரயில் நிலையத்தில் பராமரிப்பு செய்யப்படும் ரயில் ஆகும். கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் எந்த ஒரு பராமரிப்பும் தேவையில்லை. தற்போது கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள இருப்புபாதைகள் 90 சதமானம் இருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு ரயில்கள் எந்த ஒரு கிராசிங் இன்றி இயங்கி வருகிறது.

வருகின்ற நிதி ஆண்டிற்குள் மீதமுள்ள 10 சதவிகித பணிகளும் நிறைவு பெற்றுவிடும் என்று காலஅளவு நிர்ணயம் செய்து பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதனால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை வழித்தட பிரச்சனை கிடையாது. எனவே தாம்பரம் - ஐதராபாத் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்பது பிரதான கோரிக்கை ஆகும்.

திப்ரூகர் நீட்டிப்பு ஏன்?

கன்னியாகுமரி ரயில் நிலையம் இடநெருக்கடியாக தற்போதுள்ளது என்று தெற்கு ரயில்வே கூறி உள்ள நிலையில், கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகருக்கு அறிவிக்கப்பட்ட ரயில், தமிழ்நாடு பயணிகளின் பயன்பாட்டிற்காக இல்லை. திருவனந்தபுரம் வரை வந்த திப்ரூகர் ரயிலை, கன்னியாகுமரிக்கு நீட்டித்த தெற்கு ரயில்வே, வண்டி எண் 12759-12760 சார்மினார் ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய முடியாதது ஏன்? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே இந்த சார்மினார் ரயிலை இயக்க முடியாமல் போனால் கன்னியாகுமரி  திப்ருகார் ரயிலையும் கன்னியாகுமரியிலிருந்து இயக்க கூடாது என்று  ரயில்வே ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்த போவதாக, ரயில் பயணிகள் ஆலோசனை குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>