×

கொள்ளிடம் அருகே 10 ஆண்டுகளுக்குப் பிறகு சாலை சீரமைக்கும் பணி துவக்கம்

கொள்ளிடம்: கொள்ளிடம் அருகே 10 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தூரிலிருந்து மாதிரவேளூர் செல்லும் சாலையில் சோதியக்குடி கிராமத்தில் சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள புத்தூரிலிருந்து சோதியக்குடி, சிதம்பரநாதபுரம், கொன்னகாட்டு படுகை, கீரங்குடி வழியாக மாதிரவேளூர் செல்லும் 8 கிலோ மீட்டர் தூர சாலை கடந்த பத்து வருடங்களாக மேம்படுத்தப்படாமல் இருந்தது. இதனால் சாலையில் பல இடங்களில் குண்டும் குழியுமாகவும், பள்ளமாகவும், சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து கிடந்தது.

இந்த சாலை வழியே செல்லும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை மேம்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி சோதியக்குடி, சிதம்பரபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியல் முயற்சியில் ஈடுபட்டனர். கொள்ளிடம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மேம்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து கொள்ளிடம் ஒன்றியகுழு தலைவர் ஜெயபிரகாஷ் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில் புத்தூரிலிருந்து தற்காலிகமாக சாலை மேம்படுத்தும் பணியை துவக்க நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து நேற்று முதல் சாலை சரிபடுத்தும் துவங்கியது. கடந்த பத்து வருடங்களாக சாலை மேம்படுத்தும் பணி துவங்கப்படாமல் இருந்த நிலையில் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று நேற்று சாலை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டதால் கிராம மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Tags : Kollidam , Commencement of road rehabilitation work after 10 years near Kollidam
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி