×

சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் தீபாவளியையொட்டி புதிய டிசைன்களில் காட்டன் சேலைகள் உற்பத்தி ‘படு ஸ்பீடு’

ஆண்டிப்பட்டி: ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மற்றும் டி.சுப்புலாபுரம் பகுதிகளில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய டிசைன்களுடன் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம், கொப்பையம்பட்டி, சண்முகசுந்தராபுரம், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விசைத்தறிகளுடன் 2ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நெசவாளர்களும் நெசவு தொழில் செய்து வருகின்றனர்.

இந்த பகுதியில் சுங்குடி காட்டன், செட்டி நாடு காட்டன், பேப்பர் காட்டன், காரைக்குடி காட்டன், கோடம்பாக்கம் காட்டன், 60க்கு80, 80க்கு60 நம்பர், நைஸ் ரகங்களின் பிளைன், புட்டா, கோர்வை, ஸ்கிரீன் பிரின்டிங், பேடு ரகங்கள், கட்டம் உள்ளிட்ட பல டிசைன்களின் காட்டன் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த 5 ஊர்களிலும் சேர்த்து ஒரு நாளைக்கு 20 முதல் 25 லட்சம் மதிப்பிலான சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

100 சதவீத காட்டனில் இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான சேலைகள் உற்பத்திக்கான ஆர்டர்கள் அதிகளவில் வந்துள்ளது. இதன்காரணமாக டி.சுப்புலாபுரம், சக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறி கூடங்களில் இரவு பகலாக சேலைகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் அதே  நேரத்தில் மூலப்பொருள்களான நூல் விலை கணிசமாக உயர்ந்துள்ளதால் எதிர்பார்த்த  லாபம் கிடைக்கவில்லை என்றும், நெசவாளர்களுக்கு போதுமான ஊதியம்  கிடைக்கவில்லை என்றும், நூல்விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தால் நெசவாளர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில், ‘‘இந்தாண்டு தீபாவளிக்காக பெண்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு புதிய டிசைன்களில் சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. அதன்படி கும்கி, கட்டம்புட்டா, கபாலிகட்டம், காஞ்சனாபுட்டா, காத்தாடிபுட்டா, மெர்சரைஸ், பேன்சிகட்டம்,  ஜரிகை காட்டன், செட்டிநாடு பிளைன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட டிசைன்களில் சேலைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக இளம் வயது பெண்களை கவரும் வகையில் பல்வேறு புதிய டிசைன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக சேலையின் முந்தி பகுதியில் மட்டுமே டிசைன்கள் செய்யப்படும் நிலையில், இந்த ஆண்டு முந்தி மட்டுமின்றி முழு சேலைகளும் பல்வேறு டிசைன்கள் போடப்பட்டு நவீன முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.’’ என்றனர்.

ஆன்லைனிலும் விற்பனை ஜோரு
ஆண்டிபட்டி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகளுக்கு அதிகளவு மவுசு உள்ளது. இதனால் நெசவாளர்கள் மற்றும் வியாபாரிகள் ஆன்லைன் மூலம் சேலை விற்பனையை தொடங்கியுள்ளனர். இந்த ஆன்லைன் விற்பனை வாடிக்கையாளர் மத்தியில் பெறும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சக்கம்பட்டி, டிசுப்புலாபுரம் பகுதியில் புதிதாக சேலை விற்பனையை  இளைஞர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். உள்ளுர் வியாபாரிகள் சேலையை படம் பிடித்து பேஸ் புக், வாட்ஸ் அப், இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கின்றனர்.

தேவைப்படும் நபரின் தொடர்புக்கு பின் விலை நிர்ணயம் செய்து வியாபார ஆர்டர் பெற்று பார்சலில் அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஊர் ஊராக சென்று கடைகள் மற்றும் வியாபாரிகளை சந்தித்து ஆர்டர் வாங்குவதை விட ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெறுவது எளிதாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Badu Speed ,Deepavali ,Sakkampatti ,D. Subbulapuram , ‘Badu Speed’ produces cotton sarees in new designs for Diwali in Sakkampatti, D. Subbulapuram
× RELATED நெருங்கும் தீபாவளி பண்டிகை: பட்டாசு உற்பத்தி பணிகள் சிவகாசியில் தீவிரம்