×

9 மாவட்டங்களுக்கு நடந்த மறைமுக தேர்தலிலும் அதிக இடங்களை வென்று திமுக வெற்றி: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

சென்னை: 9 மாவட்டங்களுக்கு நடந்த மறைமுக தேர்தலிலும் அதிக இடங்களை வென்று திமுக வெற்றி பெற்றுள்ளது என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி துணை தலைவர், ஊராட்சி ஒன்றியகுழுத் தலைவர், ஊராட்சி ஒன்றியகுழுத் துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகிய பணியிடங்களை நிரப்பிட சாதாரண மறைமுகத் தேர்தல்கள் நேற்று தொடர்புடைய அலுவலகங்களில் நடைபெற்றன.

9 மாவட்ட ஊராட்சி தலைவர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அனைத்து மாவட்ட ஊராட்சித் தலைவர் பணியிடத்திலும் திமுக வெற்றி பெற்றுள்ளது. 9 மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 6 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 2 இடங்களிலும், விசிக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. 74 ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பணியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கான தலைவர் தேர்தல், தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 73 பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 68 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

எஞ்சிய 3 பதவியிடங்களுக்கு சூறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடக்கவில்லை. அதேபோன்று 74 ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கான துணை தலைவர் தேர்தல், தேர்தல் அறிவிப்பில் உள்ள குறைபாடு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 73 பதவியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 62 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 3 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர்கள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய 5 பதவியிடங்களுக்கு சூறைவெண் வரம்பின்மை காரணமாக தேர்தல் நடக்கவில்லை. கோவை, ஈரோடு, கரூர், மற்றும் நாமக்கல் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் பதவியிடங்களுக்கு நடைபெற்ற மறைமுக தற்செயல் தேர்தலில், ஈரோடு, மற்றும் நாமக்கல் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடத்தில் திமுகவும், கோவை மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவியிடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடத்திற்கு தேர்தல் நடக்கவில்லை. மேலும் மறைமுக தற்செயல் தேர்தலில் 6 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியிடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 4 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பதவியிடத்திற்கு தேர்தல் நடைபெறவில்லை. 13 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவியிடத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 7 இடங்களிலும், அதிமுக ஒரு இடத்திலும், பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்திலும், சுயேச்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். எஞ்சிய 3 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


Tags : Districts ,Election Commission , DMK wins more seats in by-elections to 9 districts: Election Commission
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை