டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்: ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா முதல் போட்டியில் மோதல்

துபாய்: 7வது ஐசிசி டி.20உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் குரூப்- 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். சூப்பர் 12 சுற்றின் முதல் நாளான இன்று மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்மித், மிட்சல்மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதில் வார்னர் பார்ம் இழந்து தவித்து வருகிறார். இதனால் மேக்ஸ்வெல், ஸ்மித், மார்சையே பெரிதும் நம்பி உள்ளது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் வேகத்தில் ஹேசல்வுட், ஸ்டார்க், சுழலில் ஆஷ்டன் அகர், ஜம்பா ஆகியோர் உள்ளனர். மறுபுறம் தென்ஆப்ரிக்கா அணியும் பார்மில் உள்ளது. கேப்டன் பவுமா, டி காக், மார்க்ராம், துஸ்சென் பேட்டிங்கிலும் வலுசேர்க்கலாம். பந்துவீச்சில் ரபாடா, நோர்டியா, நிகிரி, மகராஜ், ஷம்சி ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்.

Related Stories:

More