×

அம்மா உணவகத்தில் சப்பாத்தி விநியோகம் நிறுத்தம்: மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை : அம்மா உணவகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி விநியோகத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (அக்.23) வெளியிட்ட அறிக்கை:

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு வாழும் மனிதர்கெல்லாம் என்ற பாரதியாரின் கூற்றுப்படி, நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் வகையிலும், ஏழை, எளிய மக்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்கள், ஓட்டுநர்கள், பாரம் தூக்குபவர்கள் எனக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிபவர்களுக்கான மலிவு விலையில் சுகாதார மற்றும் தரமான உணவு வழங்கும் திட்டமான அம்மா உணவகம் திட்டம் ஜெயலலிதாவால் சென்னையில் 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியன்று தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர், இந்தத் திட்டம் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

2016ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஜெயலலிதாவின் பெயரிலான பல்கலைக்கழகத்தை நீக்கியது, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அங்கிருந்து மாற்ற முயல்வது, காமராஜர் சாலை, மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் முழு திருவுருவச் சிலையைப் பராமரிக்காதது என்ற வரிசையில் அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தகவல்கள் வருகின்றன.

அம்மா உணவகங்கள் என்பது ஏழை எளிய மக்களுக்கான உணவகங்கள். இந்த உணவகங்களில், காலையில் இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதியம் கலவை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், இரவில் சப்பாத்தி 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கரோனா ஊரடங்கின்போது ஏழை எளிய மக்களுக்கு அட்சயபாத்திரமாக இந்த உணவகங்கள் விளங்கின. ஆனால், இந்த உணவகங்களின் செயல்பாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சப்பாத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு பதில் இட்லி, தக்காளி சாதம் போன்றவை வழங்கப்பட்டு வருவதாகவும், கோதுமை விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் சப்பாத்தி வழங்கப்படுவதில்லை எனவும், குறைவான விலையில் உணவுகள் வழங்கப்படுவதால் சென்னை மாநகராட்சிக்கு 300 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், அம்மா உணவகங்களுக்கு கோதுமை வழங்கப்படாததற்குக் காரணம் நிதி நெருக்கடிதான் என்றும் தகவல்கள் வருகின்றன. மாநகராட்சி சார்பில் சப்பாத்தி வழங்கப்படுகிறது என்றாலும் உண்மை நிலை வேறாக உள்ளது.

சென்னையிலேயே இந்த நிலைமை என்றால், பிற மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கும். இந்தத் திட்டம் ஏழைகளுக்கான திட்டம் என்பதால், நிதி நெருக்கடியைக் காரணம் காண்பித்துப் படிப்படியாக இந்தத் திட்டத்தை நீர்த்துப் போகச் செய்வது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. இந்தத் திட்டம் தொடர வேண்டும், விரிவுபடுத்தப்பட வேண்டும் என்பதுதான் ஏழை, எளிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்துக்கு இருக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கடந்த சில நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்பாத்தி விநியோகத்தை மீண்டும் தொடங்கவும், இந்தத் திட்டம் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவும் நடவடிக்கை எடுத்து ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Tags : Amma ,OBS , cஓபிஎஸ்
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...