×

இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவரின் உடல் இந்திய கடலோர கடற்படையிடம் ஒப்படைப்பு!!

டெல்லி : புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 18ம் தேதி IND-TN- 08- MM- 201 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் மூன்று மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.கோட்டைப்பட்டினத்திலிருந்து 17 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்களது ரோந்து கப்பல் மூலம் இடித்ததில் மீனவர்களின் படகு கவிழ்ந்தது இதையடுத்து கடலில் மூழ்கிய  மீனவர்களை மீட்டுத் தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து மேற்படி மூன்று மீனவர்களில் சுகந்தன் மற்றும் சேவியர் (வயது 38), ஆகிய 2 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாட்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.இலங்கை கடற்படையினரின் இத்தகைய செயலைக் கண்டித்தும், இறந்த மீனவர் ராஜ்கிரணின் சடலம் மற்றும் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள 2 மீனவர்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மீனவரின் சடலம் இந்திய கடலோரக் காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  இலங்கை கடற்படையினர் ஒப்படைத்த சடலத்தை பெற்று கொள்ள  புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 2 அலுவலர்கள், 9 மீனவர்கள் என 11 பேர் கொண்ட குழு மீனவர்களுக்குச் சொந்தமான 2 விசைப்படகுகளில் இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு சர்வதேச எல்லைக்குப் புறப்பட்டுச் சென்றது. இந்திய கடற்படை மூலம் சடலத்தை பெற்றுக் கொண்ட இக்குழு பகல் சுமார் 2 மணிக்கு கரை திரும்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவரின் உடலுக்குத் தமிழக அரசின் சார்பில் யாரேனும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Indian Coast Guard , புதுக்கோட்டை
× RELATED தெற்கு குஜராத்தில் மூழ்கிய படகில்...