×

கணினி எக்சல் சீட்டை காண்பித்து தவறு கூறுவது ஏற்புடையதல்ல அண்ணாமலை சரியான ஆதாரத்தை காட்டி தவறை நிரூபிக்கலாம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைமையகத்தில் செயல்பட்டு வரும்   24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையத்தில்   மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர்,  அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமையகத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான மின் சேவையை வழங்குவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மின் நுகர்வோர் சேவை மையம் மின்னகத்தில் தொடங்கப்பட்டது.

இந்த சேவை மையத்தில் இதுவரை 4,14,152 புகார்கள் பெறப்பட்டு அதில் 4,06,846 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஐந்து மாதங்களில் தமிழ்நாட்டில் 25,292 மின் கம்பங்கள் மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், புதிதாக 8,905 புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணியில் இதுவரை 3,337 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன. இதுபோன்று பல்வேறு நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்து வருகிறது.  மின்னகத்தில் மின் நுகர்வோர்களால் பெறப்பட்ட 98% புகார்களுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், மீதம் உள்ள 2 சதவிகித புகார்களுக்கு விரைந்து துறைவாரியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

  பருவமழை காலத்தை எதிர்கொள்ள மின்சார வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக 93,881 மின் கம்பங்கள், 19,826 கி.மீ மின் கம்பிகள், 4,600 மின்மாற்றிகள், 15,600 கி.மீ தாழ்வழுத்த புதைவடங்கள், 50 கி.மீ அளவிற்கு உயரயழுத்த புதைவடங்கள் தற்போது தயார் நிலையில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிலான அரசு மக்களுக்கான ஆட்சியினை நடத்தி வருகிறது. அண்ணாமலையின் புகாருக்கு 24 மணிநேரம்  அவகாசம் வழங்குவதாக தெரிவித்தேன். வங்கியில் இருந்து மின்பகிர்மான வட்ட  அலுவலகத்திற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட கணினி எக்சல் சீட்டினை  காண்பித்து தவறு ஏற்பட்டுள்ளதாக கூறுவது ஏற்புடையதல்ல.

இது ஒருகட்சியின் தலைமை இடத்தில்  இருப்பவர் கூறும் கருத்தல்ல. நான் சமூக வலைதளத்தில் மட்டும் பணிகளை  செய்பவன் அல்ல. எந்தவித ஆதாரமும்  இல்லாமல் அரசினை குற்றம் சொல்வது, அரசின் மீது தவறான மாயையை உருவாக்குவது போன்ற செயல்  எந்த இடத்திலாவது தவறு ஏற்பட்டிருப்பின் சரியான ஆதாரத்தை அவர்கள் காண்பித்து தவறை நிரூப்பிக்கலாம்.


Tags : Annamalai ,Minister ,Senthilpalaji , Computer Excel Seat, Annamalai, Minister Senthilpalaji
× RELATED ஓட்டுக்கு பணம் கொடுத்தேனா: அண்ணாமலை பரபரப்பு பேட்டி