×

‘தவிக்க விட்டு சென்ற தந்தை பெயர் வேண்டாம்’ தாயின் பெயரை இன்சியலாக பயன்படுத்த அனுமதிவேண்டும்: கரூர் மாணவியின் மனு வழக்கானது

மதுரை: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், மாவட்ட கல்வி அலுவலர், ஐகோர்ட் கிளை பதிவாளர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில், ‘‘நான் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். என் தந்தை எங்களை விட்டுச் சென்றதால், 14 ஆண்டுகளாக நானும், என் தாயும் தாத்தாவின் பராமரிப்பில் வசிக்கிறோம். பள்ளி ஆவணங்கள் மற்றும் ஆதாரில் என் தாயின் பெயரின் முதல் எழுத்தையே இன்சியலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. திறனாய்வு தேர்வு மற்றும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் போது, தந்தை பெயரின் முதல் எழுத்தை இன்சியலாக போடுமாறு கூறுகின்றனர். எங்களை தவிக்க விட்டுச் சென்ற என் தந்தையின் பெயரை இன்சியலாக பயன்படுத்த எனக்கு விருப்பமில்லை.

என் பெயருக்கு முன்னால் தாயின் பெயரையே இன்சியலாக பயன்படுத்த அனுமதிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’’’ என்று கூறியிருந்தார். இதுகுறித்து ஐகோர்ட் கிளையில் சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைப்படி அந்த மாணவி மைனர் என்பதால் அவரது தாய் பெயரில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த  நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அரசுத் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டார்.


Tags : Karur , Father, Mother's Name, Initial, Student, Petition
× RELATED கரூரில் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் உலா வரும் கால்நடைகள்