×

விபத்தில் இறந்தவருக்கு நிவாரணம் கிடைக்காததால் புதுவை தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் கலவரம்

வில்லியனுார்: புதுச்சேரி வில்லியனூர் அருகே சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் செல்போன் டவர் உதிரிபாகம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் மேற்குவங்கம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி முறையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது காலை 10 மணியளவில் இரும்பு உதிரிபாகங்களை எடுத்து செல்லும் கிரேன் ரோப் திடீரென அறுந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த மேற்குவங்கத்தை சேர்ந்த ஜிகர்மாலிக் (32) என்பவரது தலையில் இரும்பு பைப் விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியானார்.

 இதனால் சக தொழிலாளர்கள் ஆவேசம் அடைந்தனர். பலியான தொழிலாளர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் எனக்கோரி, ஜிகர்மாலீக் உடலை எடுக்க விடாமல் சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். தொழிலாளர்களிடம் பேச்சுவார்தை நடத்தி, இறந்த ஜிகர்மாலீக் உடலை எடுக்க சென்றனர். அப்போது தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து, பாதுகாப்பு வசதியின்றி பணி செய்வதால் அவ்வப்போது உயிர் பலி ஏற்படுவதாக புகார் தெரிவித்தனர்.  போலீசார்  தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, பின்னர் ஜிகர்மாலீக் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.  

இதனால் ஆவேசமடைந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்று திரண்டு தொழிற்சாலையில்  நிறுத்தி வைத்திருந்த அதிகாரிகளின் கார்கள் மற்றும் அலுவலகத்தை கற்கள், இரும்பு பைப், தடி உள்ளிட்ட ஆயுதங்களால் அடித்து நொறுக்கி சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது தடுக்க முயன்ற போலீசாரையும் சரமாரியாக தாக்கினர். இதில் வெங்கடேசன் என்ற காவலரின் மண்டை உடைந்தது, மேலும், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 4 போலீசாருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. போலீஸ் ஜீப்பை அடித்து நொறுக்கி தலைகீழாக புரட்டி போட்டனர். இதனால் தொழிற்சாலை போர்க்களம் போல் மாறியது.


Tags : Puthuvai factory , Accident, Relief, Puduvai, Northern Workers, Riot
× RELATED மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு...