×

காஸ் பைப் லைன் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிக்கு இந்தியில் அறிவிப்பு நோட்டீஸ்: பொதுமக்கள் வாக்குவாதம்

கிணத்துக்கடவு: காஸ் பைப்லைன் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்பான கிராம நிர்வாக அலுவலகங்களில் ஒட்டப்பட்ட அறிவிப்பு நோட்டீசில் விவரங்கள் இந்தியில் இருந்ததால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவரங்கள் தமிழில் அச்சிட கோரி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகம் வழியாக கர்நாடக எல்லை வரை பைப்லைன் அமைத்து காஸ் கொண்டு செல்லும் திட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக பைப்லைன் அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. சில இடத்தில் பைப்லைன் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு வலுத்ததால் நீதிமன்றத்தி்ல வழக்கு நடந்தது. இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தமிழக கேரள எல்லையான கிணத்துக்கடவு தாலுகாவிற்குட்பட்ட சொக்கனூர் ஊராட்சியில் தொடங்கி வடபுதூர், சொலவம்பாளையம், கொண்டம்பட்டி, வடசித்தூர், மன்றாம்பாளையம், பெரியகளந்தை வழியாக காட்டம்பட்டி வரை காஸ் பைப் லைன் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கு நிலம் எடுப்பது தொடர்பான சுற்றறிக்கையை அந்தந்த சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதை அவர்கள் பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காக அங்குள்ள தகவல் பலகையில் ஒட்டி வருகிறார்கள். இந்த விவரம் இந்தியில் மட்டுமே இருந்தது.

அப்படி கிணத்துக்கடவு தாலுகா வடசித்தூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஒட்டப்பட்ட அறிக்கையும் இந்தி மொழியில் மட்டுமே இருந்தது. இது குறித்து தகவல் பரவியதும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அங்கு கூட்டமாக திரண்டு வந்து நோட்டீஸை அகற்ற சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சியினர் எதிர்ப்பின் காரணமாக இந்தியில் ஒட்டப்பட்ட நோட்டீஸ் அகற்றப்பட்டது. இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Gas Pipeline, Land Acquisition, Work, Hindi, Notification
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக நெல்லை...