×

தாமரைக்கு இடம் கொடுக்காமல் தண்ணீர் காட்டும் புல்லட் சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஊழலில் திளைத்த அதிகாரிகள் பணியிட மாற்றத்துக்கு முயற்சி செய்யறாங்களாமே.. ஏன்..’’ என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘தொண்டைமான் மாவட்டத்தில்  இலை ஆட்சியில் பிரதம மந்திரி வீடு திட்டம், பசுமை வீடு திட்டத்தில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாம். இந்த திட்டத்தின் கீழ் பயனடைய கூடிய பயனாளிகளுக்கு முறையாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட வில்லையாம்.. இதற்கு மாற்றாக இலைகட்சி நிர்வாகிகள் பல பேருக்கு அதுவும் சட்டத்திற்கு புறம்பாக வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். இதில் சில நிர்வாகிகள் வீடு கட்டாமலேயே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை தாஜா செய்து அவர்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டிங்கை கொடுத்து வீடு கட்டியதாக பில் வாங்கி கொண்டார்களாம்… இலை ஆட்சியின் போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு பாதிப்பட்ட பயனாளிகளிடம் இருந்து புகார் சென்றதாம்.. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம்… ஆட்சி மாற்றத்தால் தற்போது தகவல் கசிய தொடங்கியுள்ளதாம்.. இதுதொடர்பாக மாவட்டத்தில் யூனியன் வாரியாக ரகசிய விசாரணை நடக்கிறதாம்… இந்த விசாரணையில் எப்படியும் தப்பிக்க முடியாது என முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள், இலை கட்சி நிர்வாகிகள் கிலியில் உள்ளார்களாம்… இதனால் முறைகேடுகளில் இருந்து தப்பிக்க வேறு மாவட்டங்களுக்கு இடம் மாறுதலாகி சென்று விட வேண்டும் என கிலியில் உள்ள சில அதிகாரிகள் சென்னையில் தங்களின் சோர்ஸ் மூலம் தீவிர முயற்சி செய்து வருவதாக அத்துறையில் உள்ள ஊழியர்கள் பேசிக்கொள்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தென்னிந்தியாவில் கால் பதிக்க துடிக்கும் தாமரையை தண்ணீர் குடிக்க வைக்கும் புல்லட் சாமி பற்றிய பேச்சு தான் மத்தியில் உள்ள தலைவர்களிடம் ஓடுதாமே.. அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியமைந்தும், அமைச்சரவையை விரிவு செய்வதில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. 10 இடங்களில் வெற்றி பெற்ற புல்லட்சாமி கட்சி, நாங்கதான் அதிக இடங்களில் ஜெயித்திருக்கிறோம். எனவே,  இரண்டு அமைச்சர் பதவியை தான் தர முடியும் என்று அடித்து பேசி உள்ளது. இதைக் கேட்டு டென்ஷனான தாமரை தரப்பு,  3 நியமன எம்எல்ஏக்களை  நியமித்து சட்டசபையில் தன் பலத்தை  9 ஆக மாற்றியது. மேலும் 3 சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவையும் தங்கள் பக்கம் திருப்பி 12 ஆக உயர்த்தி உள்ளது. இதனால் கடும் ஆத்திரமடைந்த புல்லட்சாமி, லோக்கல் தாமரை  தலைவர்களிடம் இனி பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன் என்று அவர்களை சந்திப்பதை நிறுத்திவிட்டார். புல்லட்சாமியின் தீராத ஆத்திரத்துக்கு காரணத்தை விசாரித்தபோது, ஏனாம் தொகுதியில் தன்னை தோற்கடித்த சுயேச்சை எம்எல்ஏ வலிய தாமரைக்கு ஆதரவு தெரிவிப்பதும், மற்றொன்று, தனது தொகுதியான தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்தே மற்றொரு எம்எல்ஏவை நியமித்து குடைச்சல் கொடுப்பதும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளதாம். மருமகனா இருந்தாலும் துணை முதல்வர் எல்லாம் கிடையாது என்று கூடுதல் நிபந்தனை விதித்து உள்ளாராம். இப்போ அடங்கி போற மாதிரி பாவ்லா காட்டும் தாமரை, புல்லட்சாமியை நேரம் வரும்போது பதிலுக்கு செய்து காட்டும் என்கின்றனர் டெல்லி தரப்பினர்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அல்வா மாவட்டத்தில்,  பணி ஒரு இடம்… வீடு ஒரு இடம் என ஏன் காக்கிகள் தவித்து வர்றாங்க… கொஞ்சம் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழக  சட்டசபை தேர்தலுக்கு முன்பாக ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த  இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.  அந்த வகையில், நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த 45 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்  கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி  விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தாங்க.. இதனால தாங்கள் ஓரிடத்தில் வேலை செய்தாலும் கூட குடும்பத்தினரை ஏற்கனவே வேலை பார்த்த இடத்திலேயே அவர்களுடைய குடும்பத்தினர்   தொடர்ந்து வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா காரணமாக முழு ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இன்ஸ்பெக்டர்கள் தங்களது குடும்பத்தினரை கூட  பார்க்கச் செல்ல முடியவில்லையாம். ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால்  விடுமுறையும் எடுக்க முடியவில்லை. சரியான சாப்பாடும் கிடைக்கவில்லையாம்… இதனால் எப்போது டிரான்ஸ்பர் மீண்டும்  கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘முருகனின் மூன்றாம் படை வீட்டில் அவசர  நியமனம் விவகாரத்தில் பூட்டு மாவட்டத்தின் மாஜி அமைச்சர் செமையாக கல்லா கட்டினாராமே… அப்டியா…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்திலேயே  அதிக வருவாய் தருகிற ஆலயமாக முதலிடத்தில் பூட்டு மாவட்டத்தின் ‘மூன்றாம் படை வீடு’ இருக்கிறது. இங்கே நீண்ட காலம் அறங்காவலர்கள்  நியமனம் இல்லாமலே இருந்தது. இந்த நிலையில் தான்.. தேர்தல் தேதி  அறிவித்த நாளன்று, அவசர அவசரமாக அறங்காவலர் குழு உறுப்பினர்களை  இலைக்கட்சித் தரப்பினர் அறிவித்து முடித்தனர். இப்படி  அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் கூட உள்ளூர் பிரமுகர்கள் இல்லையாம். இதை விட  முக்கியமாக,  இவர்கள் எல்லோருமே  தொழிலதிபர்கள்தானாம். இந்த குழு நியமனத்தில் அப்போதைய ‘காடு  மந்திரி’யானவர் தரப்பிற்கு பல லகரங்கள் கைமாறியதென்ற குற்றச்சாட்டு  இருக்கிறது… அவசர நியமனத்தில் நடந்த குளறுபடியை சரி செய்ய வேண்டும் என்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் கேட்டு வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.  …

The post தாமரைக்கு இடம் கொடுக்காமல் தண்ணீர் காட்டும் புல்லட் சாமி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Bullet Sami ,Peter ,Thondaiman district ,
× RELATED சந்திரபாபு நாயுடு துணை பிரதமராக வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் எக்ஸ் பதிவு