×

ஹாலிவுட் பட ஷூட்டிங்கில் பயங்கரம் நடிகர் துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளர் பலி

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் அலெக் பால்ட்வின் நடிக்கும் படம், ‘ரஸ்ட்’. இப்படத்தின் ஷூட்டிங்கில் போலி என்று நினைத்து இயக்கப்பட்ட துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்ததில், பெண் ஒளிப்பதிவாளர் பலியானார்.  அலெக் பால்ட்வின் இணை தயாரிப்பு செய்து நடிக்கும் படம், ‘ரஸ்ட்’. இதன் படப்பிடிப்பு நியூ மெக்சிகோ சாண்டா ஃபே பகுதியில் நடந்தது. அப்போது படப்பிடிப்பில் ஒரு காட்சியில் பயன்படுத்த போலி துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. வெடித்தால் சத்தம் மட்டும் வருவது போல் இருந்த துப்பாக்கியை அலெக் பால்ட்வின் எடுத்து இயக்கினார்.

ஆனால், அதிலிருந்த உண்மையான குண்டு வேகமாகப் பாய்ந்ததில், இப்படத்தின் பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ், இயக்குனர் ஜோயல் சோஸா இருவரும் படுகாயம் அடைந்தனர். 42 வயதான ஹலினா ஹட்சின்ஸ், பலத்த காயம் காரணமாக மரணம் அடைந்தார். ஜோயல் சோஸாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. படப்பிடிப்பில் நடந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கு முன்பு, ‘தி க்ரோ’ என்ற ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்கில், சினிமாவுக்கு பயன்படுத்தும் துப்பாக்கியை மாற்றி நிஜ துப்பாக்கியால் சுடப்பட்டதில், புரூஸ்லீ மகன் பிராண்டன் லீ உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Hollywood , Hollywood, shooting, actor, female cinematographer
× RELATED ஹாலிவுட் நடிகரை காதலிக்கும் எமி ஜாக்சன் திடீர் விருந்து