×

நடிகர் விவேக் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணம் இல்லை: ஒன்றிய அரசின் ஆய்வுக்குழு தகவல்

புதுடெல்லி: நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று, தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழு தகவல் தெரிவித்துள்ளது. பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த ஏப்ரல் 17ம் தேதி மாரடைப்பால் திடீரென்று மரணம் அடைந்தார். அதற்கு முன் ஏப்ரல் 15ம் தேதி அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், அவரது உயிரிழப்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும், நடிகர் விவேக் உயிரிழந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சுகாதாரத்துறை திட்டவட்டமாக தெரிவித்தது.

எனினும், விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அளித்த புகாரில், நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தும்போது விதிகள் பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், விவேக் மரணம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். அவரது புகார் மனுவை ஏற்றுக்கொண்ட தேசிய மனித உரிமைகள் ஆணையம், நடிகர் விவேக் மரணம் குறித்து விசாரணை நடத்தி, 8 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய, ஒன்றிய சுகாதாரத்துறையின் தடுப்பூசி தொடர்பான விவகாரங்களை விசாரித்து வரும் ஆய்வுக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று, தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த குழு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15ம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக், ஏப்ரல் 17ம் தேதி மரணம் அடைந்தார். நடிகர் விவேக்கின் மரணம் தற்செயலானது, கொரோனா தடுப்பூசி காரணம் இல்லை என்று அந்தக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே விவேக் உயிரிழந்தார் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Vivek ,United States , Actor, Vivek, Death, Vaccine, United States
× RELATED தினசரி ரயிலாக இயக்க வாய்ப்புள்ள...