கேப்டன் எராஸ்மஸ் - டேவிட் வீஸ் அசத்தல் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது நமீபியா

ஷார்ஜா: அயர்லாந்து அணியுடனான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற நமீபியா அணி, சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. ஷார்ஜாவில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த அயர்லாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன் மட்டுமே எடுத்தது. முதல் 3 வீரர்கள் பால் ஸ்டர்லிங் 38 ரன் (24 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), கெவின் ஓ பிரைன் 25 ரன், கேப்டன் பால்பிர்னி 21 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். சிமி சிங் 5, கிரெய்க் யங் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.நமீபியா பந்துவீச்சில் ஜான் பிரைலிங்க் 3, டேவிட் வீஸ் 2, ஜொனாதன், பெர்னார்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 20 ஓவரில் 126 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களமிறங்கியது.

தொடக்க வீரர்கள் கிரெய்க் வில்லியம்ஸ் 15 ரன், ஸேன் கிரீன் 24 ரன் எடுத்து கேம்பர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். கேப்டன் எராஸ்மஸ் - டேவிட் வீஸ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி வெற்றியை வசப்படுத்தியது. நமீபியா 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 126 ரன் எடுத்து வென்று சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.எராஸ்மஸ் 53 ரன் (49 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), டேவிட் வீஸ் 28 ரன்னுடன் (14 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆல் ரவுண்டராக ஜொலித்த வீஸ் (36 வயது) ஆட்ட நாயகன் விருது பெற்றார். இவர் தென் ஆப்ரிக்க அணி முன்னாள் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: