×

தாம்பரம் அடுத்துள்ள நெடுங்குன்றம் ஊராட்சியில் சிறையில் உள்ள பிரபல ரவுடியின் மனைவி துணை தலைவராக போட்டியின்றி தேர்வு: பாஜ வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திரண்டதால் பரபரப்பு

தாம்பரம்: தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சூர்யா (34). இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சமீபத்தில் பாஜவில் இணைந்த சூர்யா, தற்போது சிறையில் உள்ளார். இவருக்கு விஜயலட்சுமி (32) என்ற மனைவி மற்றும் கோகுல் என்ற மகன், யுவ என்ற மகள் உள்ளனர்.நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில், 9வது வார்டு உறுப்பினர் பதவிக்கு விஜய லட்சுமி சுயேட்சையாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஜெயலட்சுமி என்பவர் மட்டும் போட்டியிட்டார். ஆனால் அவரும் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றதன் மூலம் விஜயலட்சுமி போட்டியின்றி 9வது வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 20ம் தேதி தேர்தலில் வெற்றி பெற்ற நபர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நெடுங்குன்றம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் விஜயலட்சுமி கலந்துகொண்டு பதவியேற்றார். பின்னர் மேடையிலிருந்து விஜயலட்சுமி கீழே இறங்கிய போது, அங்கு வந்த ஓட்டேரி காவல் நிலைய போலீசார், பழைய வழக்கு ஒன்றில் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில், நெடுங்குன்றம் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு நேற்று வேட்பு மனு தாக்கல் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் விஜயலட்சுமிக்காக முன்மொழிந்த பன்னீர் மற்றும் வழிமொழிந்த பாலாஜி ஆகியோர், விஜயலட்சுமியின் துணை தலைவருக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். அப்போது, பாஜ வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர்  அலெக்ஸ் சுதாகர் தலைமையில் 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மற்றும்  ஆதரவாளர்கள் ஊராட்சி அலுவலகம் அருகே திரண்டனர்.

 இதனால், அங்கு  சேலையூர் உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் போலீசார்  குவிக்கப்பட்டனர்.நெடுங்குன்றம் ஊராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டு உறுப்பினர்களில், விஜயலட்சுமி சிறையில் இருப்பதால், அவரை தவிர 14 வார்டு உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் கலந்துகொண்டனர். இதில், 12 வார்டு உறுப்பினர்கள் விஜயலட்சுமிக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து அவர் ஊராட்சி துணை தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து, அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 


Tags : Nedunkunram panchayat ,Tambaram , In the Nedunkunram panchayat next to Tambaram Prominent Rowdy's wife elected as vice-president without contest: BJP lawyer faction headed by state secretary Excitement as more than 40 lawyers gathered
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!