மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் எடப்பாடி நண்பர் இளங்கோவன் வீட்டில் ரெய்டு

* சென்னை, சேலம், நாமக்கல், திருச்சி உட்பட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி

* 21 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, பல கோடி சொத்து ஆவணம் சிக்கியது

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நண்பருமான இளங்கோவனின் சேலம், சென்னை, திருச்சி, கள்ளக்குறிச்சி, கரூர் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவர், வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இந்த சோதனையில் 29.77 லட்சம் ரொக்கப்பணம், 21.2 கிலோ தங்க நகைகள், 282 கிலோ வெள்ளி பொருட்கள், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ சொகுசு பஸ்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், பல கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கின.தமிழகத்தில் கடந்த 2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக சார்பில் தமிழக ஆளுநரிடம் உரிய ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், புகாரின்படி அதிமுக அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன்பிறகு திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பிறகு, ஆளுநரிடம் கொடுக்கப்பட்ட ஊழல் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர்களின் ஊழல் ஆதாரங்களின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பல லட்சம் ரொக்கம், கிலோ கணக்கில் தங்க நகைகள், சொகுசு கார்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் மற்றும் பினாமிகள் பெயரில் வாங்கி குவித்துள்ள சொத்துகள் ஆவணங்கள் சிக்கின. இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று அதிரடி ரெய்டு நடத்தியுள்ளனர். வீடு, அலுவலகம் என மொத்தம் 36 இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது.சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (57). இவர், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பராவார். இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மாநில தலைவராகவும், சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் உள்ளார். அதோடு இல்லாமல் ஜெயலலிதா பேரவை சேலம் மாவட்டம் புறநகர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் மாநில தலைவராக உள்ள இளங்கோவன் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்துள்ளதாக தொடர் புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வந்தன. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், இளங்கோவன் தமிழ்நாடு கூட்டுறவு சங்க மாநில தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்க தலைவர் பதவியை தவறாக பயன்படுத்தி கடந்த 2014 முதல் 2020 வரை 6 ஆண்டுகளில் வருமானத்தைவிட 131%, அதாவது ரூ.3.78 கோடி சொத்து சேர்த்துள்ளது தெரியவந்தது. அதைதொடர்ந்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் முருகன், இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இருவருக்கும் சொந்தமான 36 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக, சேலத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகம், அவரது உறவினர்கள் வீடுகள், அவர் பங்குதாரராக உள்ள நகைக்கடைகள், நிறுவனங்கள், அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகப்பட்டவர்களின் வீடுகள் என 23 இடங்களிலும், முசிறி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் உள்பட திருச்சியில் 6 இடங்கள், நாமக்கல் மாவட்டத்தில் 3 இடங்கள், சென்னை 3 இடங்கள், கோவை ஒரு இடம் என மொத்தம் 36 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகேயுள்ள புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டில் டிஎஸ்பி மதியழகன் தலைமையில் 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 50 போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் இளங்கோவன் வீடு பூட்டப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இளங்கோவனை தொடர்பு கொண்டனர். அப்போது, இளங்கோவன் சென்னையில் இருந்துள்ளார். பின்னர் அதிகாரிகள் அழைப்பின்பேரில், இளங்கோவன் 5 மணி நேரத்திற்கு பிறகு புத்திரகவுண்டம்பாளையத்திற்கு வந்தார். அதன் பிறகு இளங்கோவன் முன்னிலையில் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஆத்தூரில் உள்ள இளங்கோவனின் தோட்டம், அவரது சகோதரி வீடு, அவரது நண்பரும்சேலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் துணை தலைவருமான குபேந்திரன் வீடு, அதிமுக நிர்வாகி ராஜராஜசோழன் வீடு, கடைகள் என 23 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ₹29.77 லட்சம் ரொக்க பணம், 21.2 கிலோ (2,650 பவுன்) தங்க நகைகள், 10 சொகுசு கார்கள், 2 வால்வோ சொகுசு பஸ்கள், 282 கிலோ வெள்ளி பொருட்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி வைப்புத்தொகை ₹68 லட்சம், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்களின்படி இளங்கோவனிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சென்னை கோடம்பாக்கம் ஆண்டவர் நகர் 2வது தெருவில் உள்ள இளங்கோவன் நண்பர் ராஜ் நாராயணன் வீடு, கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 5வது குறுக்கு தெருவில் உள்ள பிர்மிங்கம் இன்டஸ்ட்ரீஸ் அலுவலகம் உள்பட 3 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது வழக்கு தொடர்பாக முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைப்பற்றினர். திருச்சி மாவட்டம் முசிறியில் இளங்கோவன் மகன் பிரவீன்குமார் நடத்தி வரும் கல்லூரி, பாலிடெக்னிக் ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. கள்ளக்குறிச்சி, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இளங்கோவனின் நண்பர்கள் வீடு, கல்வி நிறுவனங்கள், ஆத்தூரில் இளங்கோவன் ஆதரவாளர் வீடு உள்பட மொத்தம் 36 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.இந்த சோதனை மற்றும் விசாரணையில் வருமானத்திற்கு அதிகமாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான முக்கிய ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கியுள்ளது. நேற்றிரவு 10 மணி வரையிலும் புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள இளங்கோவனின் வீட்டில் சோதனை நீடித்தது.

யார் இந்த பலாக்கொட்டை இளங்கோவன்?

மாஜி முதல்வர் எடப்பாடியின் நெருங்கிய நண்பராக திகழ்ந்து வருபவர் தான் இளங்கோவன். இவரது ஆரம்ப கட்ட வாழ்க்கையை பார்த்தால் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை அறிய முடியும். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த இவருக்கு அடைக்கலம் கொடுத்தவர் அவரது பெரியப்பா. அவரது வீட்டில் இருந்து 9ம்வகுப்பு வரை படித்தார். மேலும் படிக்க வசதியில்லாததால் அவரால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் சேலம் பழைய பஸ்நிலையத்தில் டீக்கடை ஒன்றில் வேலை பார்த்தார். பின்னர் கருமந்துறை பகுதியில் அதிகளவில் விளையும் பலாப்பழ கொட்டையை விற்பனை செய்தார். இதனால் அவரை பலாக்கொட்டை இளங்கோவன் என்றே இன்னும் அழைக்கிறார்கள்.

ஒருகட்டத்தில் அதிமுகவில் சேர்ந்த இளங்கோவன், ஏத்தாப்பூர் அருகேயுள்ள கல்லேரிப்பட்டி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட சீட் கேட்டுள்ளார். எந்த பின்புலமும் இல்லாத நிலையில், அப்போதைய அதிமுக முக்கிய நிர்வாகிகள் அவருக்காக தீவிர பிரசாரம் செய்து வெற்றிபெற வைத்தனர். இவரது உறவினர் ஒருவர் சேலம் குடிநீர் வடிகால் வாரியத்தில் பணியாற்றி வந்துள்ளார். அவரது அறிவுறுத்தலின்பேரில் சிறு சிறு டெண்டர் எடுத்து மலை கிராமங்களில் தண்ணீர் டேங்க் கட்டிக்கொடுக்கும் வேலை செய்துவந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆத்தூர் எம்எல்ஏவாக இருந்த மஞ்சினி முருகேசனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு ஜெயலலிதா நடத்திய நேர்காணலில், தனது ஆதரவாளரான இளங்கோவனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்க மஞ்சினி முருகேசன் ஜெயலலிதாவிடம் பரிந்துரைத்துள்ளார். அதன்படி இளங்கோவன் மாவட்ட செயலாளரானார்.

பிஎஸ்டி கட்டுமான நிறுவனர் வீட்டிலும் விஜிலென்ஸ் ரெய்டு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கோலாரம் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு. இவர் பிஎஸ்டி என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார்.  இவரது நிறுவனம்தான், சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியம் கட்டடத்தை கட்டியுள்ளது. அந்த கட்டிடத்தின் மேற்பூச்சு தொட்டாலே பொலபொலவென உதிர்ந்து விழுந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இளங்கோவன் வீட்டில் நடக்கும் சோதனையின் தொடர்ச்சியாக, நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள பிஎஸ்டி கட்டுமான நிறுவன அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு பிரிவுபோலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கட்டுமான நிறுவனர் தென்னரசு அலுவலகத்தில் இருந்தார். இதேபோல பரமத்திவேலூர் அடுத்த கோலாரத்தில் உள்ள தென்னரசுவின் வீட்டிலும் சோதனை நடந்தது. அதிமுக ஆட்சியின் போது தென்னரசு நிறுவனம் கட்டிய பல கட்டிடங்களில் முறைகேடுகள், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த ெரய்டு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

வருமானத்துக்கு அதிகமாக குவித்த 3.78 கோடி சொத்து: முதல் தகவல் அறிக்கையில் தகவல்

சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் புகாரின் பேரில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் மற்றும் அவரது மகன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கூறியிருப்பதாவது:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த புத்திரகவுண்டம்பாளையம் முஸ்லீம் தெருவை சேர்ந்த ராமலிங்கம்பிள்ளை மகன் இளங்கோவன் (57).  இவருக்கு பானுரேகா என்ற மனைவி உள்ளார். இவரது மனைவி 1996ம் ஆண்டு 2ம் நிலை ஆசிரியராக அரசுப் பணியில் சேர்ந்தார். தற்போது, 2004 முதல் புத்திரகவுண்டன்பாளையம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு பிரவீன் குமார், ஜெய என்ற மகன், மகள் உள்ளனர். இளங்கோவின் மகன் பிரவீன் குமார் (27) மோனிகா என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர் திருச்சி மாவட்டம் முசிறியில் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து  கல்வி அறக்கட்டளையின் துணைத் தலைவரானார்.

இளங்கோவன் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு புத்திரகவுண்டன்பாளையத்தில் 4.40 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராக இளங்கோவன் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் கடந்த 2018ம் ஆண்டில் அதே பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இளங்கோவன் சொந்த இடத்தில் பெரிய அளவில் வீடு கட்டியுள்ளார். கடந்த 2014 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள் மூலமாக இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அதிகளவு சொத்து சேர்த்துள்ளனர்.இளங்கோவனுக்கு கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு முன்பு வரை வீடு, வங்கி கணக்குகள் மற்றும் நகைகள் என மொத்தம் 30,24,540 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் வரை வீடு, வங்கி கணக்குகள், வாகனம் மற்றும் நகைகள் என மொத்தம் 5,61,21,805 ஆக அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த 2014 முதல் 2020 வரை சொத்து மதிப்பு 2,88,61,004 ஆக இருக்க வேண்டும். அதேநேரத்தில் கடந்த 2014 முதல் 2020 வரை தோராயமாக 1,35,95,464 செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 முதல் 2020 வரையிலான காலத்தில் வருவாயை விட 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 சேர்த்துள்ளனர். இந்த தொகை மொத்த வருமானத்தில் 131 சதவீதமாக இருந்தது. இளங்கோவன் மற்றும் அவரது மகன் பிரவீன்குமார் பல்வேறு இடங்களில் பினாமிகள் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். மேலும், திருச்சி மாவட்டம், முசிறி, சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளையால் நடத்தப்படும் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் முறைகேடான பணத்திலிருந்து அதிக அளவில் முதலீடு செய்ததாக தெரிகிறது.இதனால் முதல் குற்றவாளியாக இளங்கோவனும், 2வது குற்றவாளியாக சுவாமி அய்யப்பன் எஜூகேஷனல் டிரஸ்ட் துணைத்தலைவர் பிரவீன்குமாரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பணமதிப்பிழப்பு நேரத்தில் செல்லாத நோட்டுகளை மாற்றியதும் அம்பலம்

2016ம் ஆண்டு 500, 1000 பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட போது, இளங்கோவன் தனது பதவியை தவறாக பயன்படுத்தி பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் மாற்றியதற்கான ஆதாரங்கள், அப்போது அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலருக்கு ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகளவில் பழைய ரூபாய் நோட்டுகளை சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் அவசர அவசரமாக போலி கணக்குகள் தொடங்கி பணம் பரிமாற்றம் செய்து கொடுத்தார் என்று அப்போது இளங்கோவன் மீது புகார் எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் இளங்கோவனுக்கு சொந்தமான 36 இடங்களில் நடந்த சோதனையில் ஆவணங்கள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

ரிமோட் கன்ட்ரோல் மூலம் திறக்கும் சொகுசு பங்களா

சேலம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் இளங்கோவனின் வீடு ஏத்தாப்பூர் அருகேயுள்ள புத்திரகவுண்டம் பாளையத்தில் உள்ளது. 3 அடுக்கு கொண்ட இந்த சொகுசு பங்களாவில் 2 லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதிநவீன வசதிகளும் இந்த சொகுசு பங்களாவில் இடம்பெற்றுள்ளது. சாவி மூலம் இந்த பங்களாவை திறக்கமுடியாது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் அல்லது ரகசிய குறியீட்டு எண்கள் மூலம் தான் திறக்க முடியும். இதனால் நேற்று காலை இளங்கோவன் வீட்டிற்கு சோதனைக்கு வந்த  திருவண்ணாமலை மாவட்ட டி.எஸ்.பி. மதியழகன், இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் வீட்டை திறக்க முடியாமல் 5 மணி நேரம் காத்திருந்து இளங்கோவன் வந்த பிறகு சோதனை நடத்தினர்.

பெண் எம்எல்ஏ எதிர்ப்பு கட்சியினருக்கு பிரியாணி

இளங்கோவன் வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு நடக்கும் தகவல் அறிந்ததும், புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டின் முன் ஏற்காடு எம்எல்ஏ சித்ரா தலைமையில் அதிமுகவினர் திரண்டனர். அவர்கள் ரெய்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் ரெய்டு நடந்த மற்ற இடங்களில் கட்சியினர் யாரும் திரளவில்லை. இதற்கிடையில் புத்திரகவுண்டம்பாளையம் வீட்டில் திரண்டவர்களுக்கு அருகில் உள்ள மெஸ்சில் இருந்து கொண்டு வரப்பட்ட சூடான பிரியாணியும் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட பிறகு கட்சியினர் மெல்ல, மெல்ல கலைய ஆரம்பித்தனர்.

அமைச்சர்களே உதவிக்கு நாடிய அதிகார மையம்

மாவட்ட செயலாளர் ஆனதும் இளங்கோவனுக்கு, எடப்பாடியுடன் பழக்கம் ஏற்பட்டதும் தனக்கு உதவிய மஞ்சினி முருகேசனை உதறிவிட்டார். பணமும் குவியத் தொடங்கியது. அப்போது சேலத்தை சேர்ந்த நடிகருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். பிறகு எடப்பாடிக்கு எல்லாமுமாக இருந்தார். இதனால் சேலம் புறநகர் மாவட்ட ஜெ.பேரவை செயலாளரானார்.

எடப்பாடி முதல்வரானதால் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இவரது விசுவாசத்தை பார்த்த எடப்பாடி, மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் பொறுப்பையும் அளித்தார். 2016 தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க கூட்டுறவு வங்கிகள் மூலமாக சப்ளை செய்ததாக இளங்கோவன் மீது குற்றச்சாட்டுகளும் எழுந்தது. எடப்பாடியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி அதிகாரிகளுக்கு இடமாறுதல் வாங்கி தந்தார். அமைச்சர்களே இவரின் உதவியை தேடி வந்தனர். பேச்சு திறமை, தியாகம், கொள்கை பிடிப்பு எதுவுமே இல்லாத நிலையில் அதிமுகவின் அதிகார மையமாக இருந்தவர் தான் இளங்கோவன் என்பது மூத்த கட்சி நிர்வாகிகளின் குமுறல்.

Related Stories:

More