×

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை தடுக்க சிறப்பு டிஜிபி முயற்சி!: ஐகோர்ட்டில் தமிழக அரசு புகார்..!!

சென்னை: பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்த முன்னாள் சிறப்பு டிஜிபி முயற்சிப்பதாக புகார் எழுந்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீதான புகார் குறித்து விசாரிக்க, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை தடுப்பு சட்டப்படி கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழு விசாரணையை முடித்து கடந்த ஏப்ரலில் அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அடிப்படையில் சிறப்பு டிஜிபிக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விசாகா கமிட்டியின் விசாரணை நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த கூடுதல் டிஜிபி சீமா அகர்வால், ஐ.ஜி. அருண் ஆகியோர் தனக்கு எதிராக ஒருதலை பட்சமாக செயல்படுவார்கள் என்பதால் இருவரையும் நீக்கக்கோரி உள்துறை செயலாளருக்கு மனு அளித்ததாகவும், இந்த மனு பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். மேலும் சாட்சி அளித்த பலர், பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு கீழ் பணிபுரிவதால் அவரை இடமாற்றம் செய்யக்கோரி மனுவும் ஏற்கப்படவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அச்சமயம் சிறப்பு டிஜிபி தரப்பில் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர், விசாகா கமிட்டி விசாரணையின் சாட்சிகளுடைய வாக்குமூல அறிக்கை தனக்கு தரப்படவில்லை என்றும் தான் குறுக்கு விசாரணை செய்ய அவை தேவைப்படுகிறது என்றும் மேலும் பாரபட்சமான ஒரு விசாரணை நடைபெறுவதாகவும் வாதிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஏற்கனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதுமட்டுமின்றி பாலியல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டதையும் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த அருண் என்ற அதிகாரி சிறப்பு டிஜிபியின் கோரிக்கைப்படி மாற்றப்பட்டுவிட்டார் என்றும் குறிப்பிட்டார். வேண்டுமென்றே தனக்கு எதிரான வழக்கை தாமதப்படுத்த தொடர்ந்து ராஜேஷ்தாஸ் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். இதுகுறித்து ஒரு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சரவணன், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து, அதற்குள் தமிழக அரசு உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


Tags : DGP ,TN ,Icorde , Sex, Special DGP, ICC, Government of Tamil Nadu
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...