போதை பொருள் வழக்கில் அதிரடி காட்டும் அதிகாரி: துபாயில் பாலிவுட் பிரபலத்திடம் பணம் பெற்றாரா? அமைச்சர் வெளியிட்ட புகைப்பட ஆதாரத்தால் பரபரப்பு

மும்பை: போதை பொருள் வழக்கில் அதிரடி காட்டி வரும் அதிகாரி பாலிவுட் பிரபலத்திடம் துபாயில் பணம் பெற்றதாக, மாநில அமைச்சர் புகைப்பட ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பு குற்றச்சாட்டை வெளிப்படுத்தி உள்ளார்.  பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டு இறந்து ஓராண்டுக்கு மேலான நிலையில், போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் பத்துக்கும் மேற்பட்ட பாலிவுட் பிரபலங்கள் கைதாகி உள்ளனர். அந்த வகையில் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் போதை பொருள் வழக்கில் கைதானதை தொடர்ந்து, தற்போது போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் மீது பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) அதிகாரி சமீர் வான்கடே மீது, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான நவாப் மாலிக் இடையே வார்த்தை போர் தீவிரமடைந்துள்ளது. விசாரணைக்காக அதிகாரி சமீர் வான்கடே வெளிநாடு சென்ற போது, அங்கு பாலிவுட் பிரபலங்களிடம் பணம் பெற்றதாக நவாப் மாலிக் குற்றம் சாட்டியுள்ளார். இவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த சமீர் வான்கடே, நவாப் மாலிக் மீது வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நவாப் மாலிக் கூறுகையில், ‘பாஜகவின் கைப்பாவை சமீர் வான்கடே; கடந்தாண்டு நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டார். சுஷாந்தின் தற்கொலையின் மர்மத்தை சிபிஐ-யால் தீர்க்க முடியவில்லை. ஆனால் போதை பொருள் தடுப்பு பிரிவு மட்டும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நடிகை ரியா சக்கரபோர்த்தியை  பொய்யான வழக்கு போட்டு கைது செய்தனர். டஜன் கணக்கான நடிகர், நடிகைகளை கைது செய்தனர்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘கொரோனா காலத்தில் பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் மாலத்தீவில் இருந்ததாக அவர் (சமீர் வான்கடே பெயரை குறிப்பிடாமல்) கூறினார். அந்த நேரத்தில், அதிகாரியின் குடும்பம் (சமீர் வான்கடே) மாலத்தீவு மற்றும் துபாயிலும் இருந்தது. அவர்கள் துபாய்க்கு சென்றார்களா? என்பதை விளக்க வேண்டும்.

பாலிவுட் நட்சத்திரங்கள் மாலத்தீவில் இருந்தபோது, அவரது குடும்ப உறுப்பினர்கள் மாலத்தீவில் இருந்தார்களா? அவர்கள் அங்கு சென்றதற்கான காரணம் என்ன? அனைத்து விசயங்களும் மாலத்தீவு மற்றும் துபாயில் நடந்துள்ளது. அதன் படங்களையும் வெளியிடுவோம். இதேநிலை நீடித்தால், ஒரு வருடத்திற்குள் சமீர் வான்கடே தனது வேலையை இழக்க நேரிடும்; மேலும் அவர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும்’ என்று கூறினார். இதுகுறித்து அதிகாரி சமீர் வான்கடே கூறுகையில், ‘நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. நான் துபாய்க்கு செல்லவில்லை. எனது மூத்த அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்ற பிறகு, எனது குழந்தைகளுடன் மாலத்தீவுக்குச் சென்றேன். எனது குடும்பம் குறி வைக்கப்படுகிறது. யாரை மிரட்டி நான் பணம் பறிக்க வேண்டும்?.

என் மீது கூறப்படும் அவதூறுகள் தொடர்பாக மூத்த அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நீதிமன்றத்திற்கு செல்வேன்’ என்று தெரிவித்தார். இதற்கிடையே போதை ெபாருள் தடுப்பு பிரிவு அலுவலக  தென்மேற்கு பிராந்திய துணை இயக்குனர் ஜெனரல் முத்தா அசோக் ஜெயின் வெளியிட்ட அறிக்கையில், ‘சமீர் வான்கடே குறித்து ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையானது அல்ல; அவர் கடந்தாண்டு ஆகஸ்ட் 31ம் தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு, அவர் துபாய்க்கு செல்வது தொடர்பாக எந்த விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை. கடந்த 27ம் தேதி குடும்ப உறுப்பினர்களுடன் அவர் மாலத்தீவுக்கு செல்ல எங்களது துறை அவருக்கு அனுமதி அளித்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் கைது நடவடிக்கைகள் பாலிவுட்டை கலக்கி வரும் நிலையில், மற்றொரு பக்கம் அதிகாரி சமீர் வான்கடே மீது ஆளும் கட்சி அமைச்சரே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறிவருவது மகாராஷ்டிரா அரசியலில் புதிய புயலை கிளப்பி உள்ளது.

Related Stories:

More
>