×

மும்பையில் இருந்து விமானம் மூலம் 6.84 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது.!

மீனம்பாக்கம்: தமிழகத்துக்குமேலும் 6.84 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தது. கொரோனா வைரஸ் 3வது அலை தமிழகத்தில் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. தவிர, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்களையும் நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசிகளை செலுத்தி கொள்கின்றனர். இதனால் தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

எனவே ஒன்றிய அரசிடம் வாரத்திற்கு 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை வைத்து வலியுறுத்தியுள்ளார். ஒன்றிய சுகாதார துறையும் சீரான இடைவெளியில் தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. இந்நிலையில் ஒன்றிய சுகாதார துறை தமிழகத்துக்கு 6.84  லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஒன்றிய மருத்துவ கிடங்கில் இருந்து நேற்று விடுவித்தது. அவைகள் 57 பார்சல்களில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் மும்பையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. விமான நிலைய அதிகாரிகள் தடுப்பூசி பார்சல்களை, தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள், குளிர்சாதன வாகனங்களில் ஏற்றி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு எடுத்து சென்றனர்.

Tags : Chennai ,Mumbai , 6.84 lakh dose of Govshield vaccine arrived in Chennai by air from Mumbai.!
× RELATED எங்கள் `இளம்’ விக்கெட் கீப்பரின்...