×

திருச்சியில் நள்ளிரவில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் 6 மணி நேரத்தில் 5 வாலிபர்களை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார்-மாநகர கமிஷனர் பாராட்டு

திருச்சி : திருச்சியில் நேற்று முன்தினம் இரவு நடந்த 2 குற்ற சம்பவங்களில் 5 பேரை 6 மணி நேரத்தில் கைது செய்த குற்றப்பிரிவு போலீசாருக்கு மாநகர கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.
திருச்சி மாநகரில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாலும், குற்றச்சம்பவங்கள் குறையவில்லை. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன்(32). ஒப்பந்த மின்வாரிய ஊழியர்.

இவர் மன்னார்புரம் மின்வாரிய அலுவலகத்திற்குள் உள்ள கட்டடத்தில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார். இதில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ஏடிஎம் சென்டரில் குடும்பத்தினருக்கு பணம் போடுவதற்காக நடந்து சென்றார். அப்போது சர்வீஸ் சாலையில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.ஆயிரம் ரொக்கம், செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

மற்றொரு சம்பவம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்(29). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக பணியில் உள்ளார். நேற்று முன்தினம் சென்னை செல்வதற்காக புறப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு திருச்சி வந்தார். திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே நடந்து வந்தபோது, பைக்கில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் செல்போனை பறித்து சென்றனர். இரு சம்பவங்கள் குறித்து நள்ளிரவு வாக்கிடாக்கியில் தகவல் பரிமாறப்பட்டது. இதனால் போலீசார் விழிப்படைந்தனர்.

தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் 2 சம்பவம் குறித்து சம்பவயிடம் சென்று விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கொண்டு உடனடி ஆய்வு செய்தனர். இதில் தனித்தனியே 2 பைக்குகளில் வந்தவர்கள் குறித்த விவரம் தெரியவந்தது.

இதையடுத்து ராம்ஜி நகர் அருகே கள்ளிக்குடியில் உள்ள அறையில் தங்கியிருந்த ராம்ஜிநகர் முத்துகிருஷ்ணன்(23), கள்ளிக்குடி ஜெகதீஷ்(23), கள்ளிக்குடி மோகன்ராஜ்(23) ஆகிய 3 பேரையும் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோல் கருமண்டபம் செக்போஸ்ட்டில் சோதனையின்போது ராமேஸ்வரம் முஸ்லிம் தெருவை சேர்ந்த ஜாபின் சுரேன்(27), அரியலூர் மாவட்டம், செந்துறை அம்பேத்கர் நகரை சேர்ந்த சரத்குமார்(24) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரவு நடந்த 2 வழக்குகளில் 5 பேரை 6 மணி நேரத்தில் கைது செய்த கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசாரை மாநகர கமிஷனர் கார்த்திகேயன் பாராட்டினார்.

Tags : Trichy ,Crime Branch ,Municipal Commissioner , Trichy: The Municipal Commissioner has lauded the Crime Branch Police for arresting 5 persons in 6 hours in 2 criminal incidents that took place in Trichy last night.
× RELATED சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு- இருவர் கைது