×

விழுப்புரம் அரசு கல்லூரியில் இறுதிகட்ட மாணவர் சேர்க்கைக்கு 2ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்பு-கூடுதல் இடங்களை ஒதுக்க பெற்றோர்கள் கோரிக்கை

விழுப்புரம் : விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இறுதிகட்ட கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே  கூடுதல் இடங்களை ஒதுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

12ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களுக்கு கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அதன்படி இதுவரை கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமையிலான கமிட்டியினர் மதிப்பெண் அடிப்படையில் நான்கு கட்ட கலந்தாய்வு நடத்தி முடித்துள்ளனர். தொடர்ந்து இறுதிக்கட்ட கலந்தாய்வில் பங்கேற்க உள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி நேற்று இறுதி கட்ட கலந்தாய்வில் பங்கேற்க  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேற்று குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் பாதுகாப்புக்கு வரவழைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வரிசையாக உள்ளே அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ மாணவிகள் எந்தப் பிரிவில் சேர உள்ளனர் என்பது குறித்து தனித்தனியாக அந்தந்த துறைகளில் விண்ணப்ப எண் உள்ளிட்ட விவரங்களை எழுதி விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி பிற்பகல் வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தினை அளித்துவிட்டுச் சென்றனர். மதிப்பெண் அடிப்படையில் தகுதியான மாணவ மாணவிகள் சேர்க்கை நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் சிவக்குமார்
தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதி கட்ட கலந்தாய்வில் குறிப்பிட்ட இடங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்ததால் அனைவருக்கும் இடம் கிடைப்பதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.

எனவே கூடுதல் இடங்களை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக உயர் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில் ஏழை, எளிய மாணவ மாணவிகள் கல்லூரியில் சேரும் வகையில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.

Tags : Villupuram Government College , Villupuram: More than two thousand to apply for the final consultation at Villupuram Scholar Anna Government Arts College
× RELATED விழுப்புரம் அரசு கல்லூரியில்...