கால்வாய் பழுதால் சாலையில் தேங்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க ஆரணி மக்கள் கோரிக்கை

ஆரணி : ஆரணி நகராட்சி கே.கே.நகர், கே.சி.கே நகர், புதுகாமூர் செல்லும் சாலை, ஆரணிப்பாளையம், தர்மராஜா கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், ஏரி நீர்வரத்து கால்வாய்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். அதேபோல், அப்பகுதியில் உள்ள கால்வாய்களில் செடி, கொடி, முட்புதர்களால் சூழ்ந்தும், குப்பை கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி கால்வாய்கள் முழுமையாக அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. இதுதவிர பல இடங்களில் கால்வாய் உடைப்பு காரணமாகவும் கழிவுநீர் செல்லாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: