×

முதல்வர் ஜெகன்மோகனை தரக்குறைவாக பேசியதை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதம்-சித்தூரில் பரபரப்பு

சித்தூர் :  முதல்வர் ஜெகன்மோகனை தரக்குறைவாக பேசியதை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சித்தூர் காந்தி சிலை அருகே முதல்வரை தரக்குறைவாக பேசிய தெலுங்கு தேசம் கட்சியினரை கண்டித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கி பேசியதாவது:  தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர் பட்டாபி முதல்வர் ஜெகன்மோகன் குறித்து தரக்குறைவாக பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு மாநிலத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை. ரவுடிகள் ஆட்சி நடைபெற்று வருகிறது என விமர்சனம் செய்து வருகிறார்.

 எதிர்க்கட்சியை ேசர்ந்த முக்கிய பிரமுகர்கள் விமர்சனம் செய்யும்போது நாவடக்கி பேச வேண்டும். அதை விட்டுவிட்டு எதிர்கட்சியினர் பேசி வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
முதல்வர் ஜெகன்மோகன் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவு பிறப்பித்தார். அந்தத் தேர்தலை நடத்த விடாமல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உத்தரவிட்டனர். இதில் எதிர்கட்சி தலைவர் சந்திரபாபுவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

அதேபோல் மாநிலம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு முதல்வர் ெஜகன்மோகன் இலவச வீட்டுமனை பட்டா வழங்கினார். ஆனால் அந்த இலவச வீட்டு மனை பட்டாவை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு வழக்கு தொடர்ந்தார். இதில், அவருக்கு தோல்வி ஏற்பட்டது. அம்மாவோடி திட்டத்தின் கீழ் முதல்வர் ஜெகன்மோகன் அனைத்து மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு ₹15 ஆயிரம் நிதி உதவி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். இதனால், ஆத்திரமடைந்த முன்னாள் முதல்வர் சந்திரபாபு இதுபோன்று நலத்திட்ட உதவிகளை ஜெகன்மோகன் வழங்கி வந்தால் வரும் தேர்தலில் நம் கட்சிக்கு ஒரு தொகுதி கூட பெற முடியாத அவலநிலை ஏற்பட்டுவிடும்.

எனவே இதனை தடுக்கவும், பொதுமக்களிடையே ஆளும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களை முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஏவிவிட்டு தரக்குறைவாக பேச வைத்து நாடகம் நடத்தி வருகிறார். இந்த நாடகத்தால் ஜெகன்மோகன் அரசுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பொது மக்களிடையே நாளுக்கு நாள் ஜெகன்மோகன் அரசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது.

 மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சிக்கு முகவரி இல்லாத அவல நிலை ஏற்படும். முதல்வர் ஜெகன் மோகன் குறித்து விமர்சனம் செய்வதை தெலுங்கு தேசம் கட்சியினர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் சுடா சேர்மன் புருஷோத்தம் ரெட்டி, மாநகராட்சி மேயர் அமுதா, துணை மேயர் ராஜேஷ் ரெட்டி உட்பட ஏராளமான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags : YSR Congress party ,Chittoor ,Chief Minister ,Jaganmohan , Chittoor: The YSR Congress party went on a hunger strike yesterday condemning Chief Minister Jaganmohan Singh for speaking poorly.
× RELATED ஆந்திராவில் எம்எல்ஏவுக்கு மீண்டும்...